Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலினும், ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமியும் நேற்று பிரச்சாரம் செய்தனர்.
சேலத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் எடப்பாடி தொகுதிக்கு சென்றார். அங்கு, திமுக வேட்பாளர் சம்பத் குமார், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோருடன் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
திடீர் பயண திட்டம்
எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் அவர் ஒரு கிமீ தூரம் நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள், வாகனத்தில் சென்றவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் பலர் ஸ்டாலினுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும், எடப்பாடியில் உள்ள தேநீர் கடையில் வேட்பாளர் சம்பத்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்து ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.
தேர்தல் பிரச்சார அட்டவணையில் எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் இல்லாத நிலையில், திடீரென அங்கு சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜராமை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று பேசியதாவது:
முதல்வர் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் இருந்தபோது கொளத்தூர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சி வந்த பிறகே கொளத்தூர் தொகுதிக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செய்யப்பட்டன. இப்போது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தொகுதிக்கு வந்து ஸ்டாலின் முகத்தை காட்டி செல்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விடும். அராஜகம் தலைவிரித்தாடும். பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே உதயநிதி ஸ்டாலின், டிஜிபியை மிரட்டுகிறார். இங்கு அரசு ஊழியர்கள் அதிகம் பேர் உள்ளீர்கள். அதிமுக ஆட்சியில் நீங்கள் நிம்மதியாக உங்கள் பணியை செய்து வருகிறீர்கள்.
நான் ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டேன். எங்கள் மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நேருக்கு நேர் விவாதிப்போம்.
நான் எடப்பாடி தொகுதியில் 10-வது முறையாக நிற்கிறேன். ஆனால், நீங்கள் தொகுதிவிட்டு தொகுதி மாறித்தானே நிற்கிறீர்கள். 2019 நாடாளுமன்ற தேர்தல் ஊர் ஊராக சென்று மனு வாங்கினார். அந்த மனு என்னாயிற்று என்றே தெரியவில்லை. அரசாங்கத்திடமும் கொடுக்கவில்லை. 2019-ல் மனு வாங்கி யாரிடம் கொடுக்க முடியும். ஒரு முறை மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றீர்கள். இனி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT