Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள், உதகை வட்டத்தின் நடுவட்டம் மற்றும் மசினகுடி பகுதிகளை உள்ளடக்கியது கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி. பொது தொகுதியாக இருந்த இந்த தொகுதி, 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
சுற்றுலாவுக்கு போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், இங்கு விவசாயமே பிரதான தொழில். தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் என பொன் விளையும் பூமியாக கருதப்படுகிறது. இந்த தொகுதி, கேரளா - கர்நாடக மாநிலஎல்லையில் அமைந்துள்ளதால், இங்குள்ளவர்கள் மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு அந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். இங்கு தாயகம்திரும்பிய தமிழர்கள், பழங்குடியினர், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மற்றும் இதர வகுப்பினர் வசிக்கின்றனர்.
முக்கியப் பிரச்சினைகள்
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நீண்ட காலமாக பிரிவு-17 நிலப்பிரச்சினை தொடர்கிறது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள், பிரிவு-17 நிலங்களாகும். இதுவரை இந்த நிலங்கள் வகைப்படுத்தப்படாததால், இங்கு வசிப்பவர்களுக்கு சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும், 10 ஆயிரம் வீடுகளுக்கு, விண்ணப்பித்தும் இதுவரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. இங்குள்ள நிலங்கள் வகைப்படுத்தப்படாததால், பல பிரிவுகளாக வனப்பகுதி சிதறியுள்ளது. இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தும், இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்பட வில்லை. யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதால் மனித - விலங்கு மோதல்நிகழ்கிறது. யானை உட்பட பல்வேறு விலங்குகள் தாக்கி, கடந்த 5 ஆண்டுகளில்சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, தனியார் காடுகள் பாதுகாப்பு திட்டம் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இங்குபல தனியார் காடுகள் உள்ளதால், ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே, அதன் உரிமையாளர்கள் நிலங்களை விற்கவோ, வாங்கவோ வேண்டும் என்ற நிலை உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதியில் மசினகுடி உட்பட பல்வேறுகிராமங்கள் உள்ளதால், வணிகரீதியிலான வளர்ச்சி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நிலம்பூர் வரை கூடலூர் வழியாக ரயில் பாதையை விரிவுப்படுத்த வேண்டும், சிறியூர் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை அமைக்க வேண்டும், தமிழக-கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேரப் போக்குவரத்துக்குக்கான தடையை நீக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின்நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.
வெற்றியை தீர்மானிப்பது யார்?
கூடலூரில் பெரும்பான்மையாக தாயகம் திரும்பிய தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் வசிக்கின்றனர். மொத்த வாக்காளர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்களே. எனவே, வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இவர்கள் உள்ளனர். இதை அறிந்துகொண்ட அரசியல் கட்சிகள், இந்த முறை தாயகம் திரும்பிய தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.
பலம் - பலவீனம்
திமுகவின் கோட்டையாக கருதப்படும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி, கடந்த 15 ஆண்டுகளாக திமுக வசமே உள்ளது. இத்தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது. அவர்களின் வாக்குகளை பெற்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என திமுக நம்புகிறது. இம்முறை கூட்டணி பலமும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், 15 ஆண்டுகளாக தொகுதியை தக்கவைத்தும், முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதது பின்னடைவாகவே கருதப்படுகிறது.
அதே சமயம், கணிசமாக வசிக்கும் மலையாளிகளான தீய, ஈழுவா சமூக மக்களுக்கு, 40 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு அதிமுக அரசு பிற்படுத்தப்பட்டோர் சான்று வழங்கியுள்ளது. இதனால், அந்த சமுதாய மக்கள் மற்றும் கூட்டணியில் உள்ள பாஜக, தாயகம் திரும்பிய தமிழர்களின் வாக்குகள் கிடைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என அதிமுக நம்பிக்கையுடன் களம் காணுகிறது. அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை முன்வைத்தும் அதிமுகவினர் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். பாஜகவுக்கு எதிரான மனநிலையில் சிறுபான்மையினர் உள்ளது அதிமுகவுக்கு பாதகமான விஷயம்.
கடந்த தேர்தல்களில் திமுகவின் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்த நிலையில், இந்த முறை அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பணியில் சிறப்பாக செயல்படுபவர்கள் வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT