Published : 28 Mar 2021 09:36 PM
Last Updated : 28 Mar 2021 09:36 PM
இந்தத் தேர்தலோடு திமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வரும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆற்காட்டில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் மற்றும் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இதையொட்டி, அக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கலவை மற்றும் காவனூர் பகுதிகளிலும், சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி மற்றும் மருதாலம் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கலவை பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ராமதாஸ் பேசியதாவது:
‘நல்லது எது ? கெட்டது எது ? என தெரிந்து அதற்கு ஏற்றார் போல வாக்குளிக்கும் திறன் கொண்டவர்கள் கலவை மக்கள். அதிமுக தேர்தலில் அறிக்கை அள்ள அள்ள குறையாத அமுதசுரபி. அதிமுக – பாமக தேர்தல் அறிக்கை என்பது அரசிதழில் வெளியானது போல. அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் அறிக்கை அப்படி இல்லை. காப்பியடித்த தேர்தல் அறிக்கை, அது திவாலாகிவிடும்.
இந்த தேர்தலோடு திமுக அத்தியாயம் முடிவுக்கு வரும். தமிழகத்தில் இந்த தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயி. நாங்கள் 2 பேரும் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நான் என் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பேச முடியாத நிலை. கரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளேன்.
கார் கண்ணாடியை கூட கீழே இறக்க முடியாத நிலை. கரோனா காரணமாக சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருங்கள்.
பல போராட்டங்களுக்கு பிறகு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டது. இதில், பாமக பங்கு முக்கியமானது. எங்கள் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றினார். அதேபோல, இன்னும் பல வளர்ச்சிகளை முதல்வர் செய்து கொடுப்பார். மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும். குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாஷிங் மிஷன் வழங்கப்படும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரபோவது உறுதியாகிவிட்டது. இம்மாவட்டத்தில் அரக்கோணம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சு.ரவி இந்த முறை அமைச்சராவார். அதன்பிறகு பல்வேறு வளர்ச்சிகள் இம்மாவட்டத்துக்கு கிடைக்கும். மழைக்காலங்களில் பாலாற்றில் வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பாலாற்றில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.
ஆற்காட்டில் புறவழிச்சாலை கொண்டு வரப்படும். ஆற்காடு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும். இந்த தொகுதியில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் பெண்கள் பெரும் சக்தி வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.
தமிழகத்தில் மதுவை ஒழிக்க திமுக தேர்தல் அறிக்கையில் எந்த திட்டமும் இல்லை. காரணம் மது ஆலைகளை நடத்துவதே திமுகவினர் தான். மதுவினால், ஆண்டுக்கு 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் பழனிசாமி ஆட்சியில் எந்த குறையும் கூற முடியாது. சிறப்பான ஆட்சியை பழனிசாமி தந்துள்ளார். அவரது ஆட்சி தொடர வேண்டும் என்பதால் அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளோம்.
எனவே, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மீண்டும் அதிமுக ஆட்சி மலர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’’. இவ்வாறு அவர் பேசினார். இதைதொடர்ந்து, சோளிங்கர் தொகுதியில் பாமக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT