Published : 28 Mar 2021 08:53 PM
Last Updated : 28 Mar 2021 08:53 PM
அஞ்சல் வாக்களிக்க காவல் துறையினருக்குப் பண விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதன் வலியுறுத்தினார்.
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட சில காவல் நிலையங்களில், தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆணையர் தனித்தனியே இன்று நடத்திய திடீர் சோதனையில், காவல் துறையினர் சிலரிடம் இருந்து பணம் வைக்கப்பட்ட உறை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருக்கு ஆதரவாக அஞ்சல் வாக்களிப்பதற்காக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மூலம் காவல் துறையினருக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் திமுக வழக்கறிஞர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் உட்பட துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதன், இன்று மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமாரிடம் கே.என்.நேருவைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பத்மநாதன் கூறுகையில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு, போலீஸாருக்கே பணப் பட்டுவாடா செய்துள்ளார். வாக்குப்பதிவின்போது, வாக்கு எண்ணிக்கையின்போதும் போலீஸார் எப்படியான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே, கே.என்.நேருவைத் தகுதி நீக்கம் செய்வதுடன், அவரைக் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தனக்குத் தொடர்பு இல்லை என்று கே.என்.நேரு கூறுவது பொய்.
பணப் பட்டுவாடா புகாரின் பேரில் காவல் துறையினர் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருச்சி மாவட்டத்தில் எத்தனை காவல் நிலையங்களில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் நானே வெற்றி பெறுவேன். அதற்கு இடையூறு செய்யும் வகையில்தான் பணம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
இந்தநிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஏ.அன்பு பிரபாகரன், மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிய புகார் மனுவில், “தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காகவே காவல் துறையினருக்குப் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்தத் தேர்தலில் கே.என்.நேரு போட்டியிடத் தடை விதிப்பதுடன், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்து, வேறொரு நாளில் நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT