Published : 28 Mar 2021 06:00 PM
Last Updated : 28 Mar 2021 06:00 PM
பள்ளிக் கல்வித்துறையில் இருக்கும் அதிகாரிகளே அமைச்சர் செங்கோட்டையனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதில்லை. அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள். அது அமைச்சருக்கே தெரியாது. அதுபோலத் தன் துறையில் எதையும் உருப்படியாகச் செய்யாதவர்தான் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் என ஸ்டாலின் பேசினார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பேசியதாவது:
''ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு மூத்த அமைச்சர். அவர்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அவர் அமைச்சர்தானா? அல்லது அமைச்சர் மாதிரி ஒருவரா? என்று யாருக்கும் புரியவில்லை.
அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதே செங்கோட்டையனிடம் கைகட்டி நின்றவர் பழனிசாமி. இன்றைக்கு பழனிசாமியிடம் கைகட்டி நிற்கிறார் செங்கோட்டையன். எனவே, பழனிசாமி இப்போது செங்கோட்டையனைப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ஆதாரங்கள், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகாது என்று சொன்னார் செங்கோட்டையன். அடுத்த நாளே ரத்து செய்தார் பழனிசாமி. பள்ளிகள் திறக்கப்படாது என்று சொன்னார் செங்கோட்டையன். அடுத்த நாளே முதல்வர் பழனிசாமி பள்ளிகள் திறக்கப்படும் என்று சொன்னார்.
பள்ளிக் கல்வித்துறையில் இருக்கும் அதிகாரிகளே அமைச்சர் செங்கோட்டையனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதில்லை. அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள். அது அமைச்சருக்கே தெரியாது. அதுபோலத் தன் துறையில் எதையும் உருப்படியாகச் செய்யாதவர்தான் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன்.
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்று கல்வித்துறையை ஒரு காவித் துறையாக மத்தியில் இருக்கும் பாஜக மாற்றிக் கொண்டிருக்கிறது. அதைக் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்காதவர்தான் இந்தப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதனால்தான் திமுக தேர்தல் அறிக்கையில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறோம்.
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் நடைபெற வேண்டும். ஆனால் அந்த முறையைத் தூக்கிவிட்டு பணத்தை வைத்துப் பணிமாறுதல் வழங்கிக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன். சரி, தன்னுடைய துறையில்தான் எதுவும் செய்யவில்லை. இந்தத் தொகுதிக்காவது எதாவது செய்திருக்கிறாரா? அதுவும் இல்லை.
இந்தக் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT