Published : 28 Mar 2021 03:51 PM
Last Updated : 28 Mar 2021 03:51 PM
திமுகவை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. திமுகவை அழிக்க சில சுள்ளான்கள், அயோக்கியர்கள் கிளம்பி வந்தார்கள். ஆனால், அப்படி நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், காங்கேயத்தில் பொதுமக்களிடையே திமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசியதாவது:
“முதல்வர் பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார். நேற்றைக்கு ஒரு கூட்டத்தில் திமுகவை வீழ்த்துவதற்கு என்னையே பலியிடத் தயார் என்று பழனிசாமி பேசியிருக்கிறார். சபாஷ் அவரை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொள்கின்ற ஒரே பெரிய மனுஷன் பழனிசாமிதான். அது பாராட்டுக்குரியதுதான்.
மிஸ்டர் பழனிசாமி அவர்களே, திமுகவை அழிக்கப் போகிறோம் என்று சொல்கிறீர்களே, திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. திமுகவை வீழ்த்தவும் முடியாது. அதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. திமுகவை வீழ்த்துவதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவுமில்லை. இனியும் ஒருவன் பிறக்கவே முடியாது.
திமுக என்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. சென்னை முதல் குமரி வரை இருக்கும் லட்சோப லட்சம் ஸ்டாலின்களைக் கொண்ட இயக்கம்தான் இந்த திமுக என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. கருணாநிதிக்கு நான் மட்டும் மகன் அல்ல. இந்த இயக்கத்தின் ஒவ்வொரு உடன்பிறப்பும் அவருடைய பிள்ளைகள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
அண்ணா காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல சுள்ளான்கள், பல அயோக்கியர்கள் திமுகவை வீழ்த்தப் போகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள். எனவே பழனிசாமியின் இந்த வசனத்தை 50 வருடங்களாக கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.
அவர்கள் ஆசையெல்லாம் நப்பாசைதான். சந்தனத்தை அரைக்க அரைக்கத்தான் மணம் வரும், வெட்ட வெட்டத்தான் மரம் தழைக்கும். திமுகவிற்கு எதிர்ப்பு வளர வளரத்தான் கட்சி வளரும். இந்த அரசியல் உண்மையை பழனிசாமி அவர்களே, நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மத்தியிலும் நம்முடைய ஆட்சி இல்லை. மாநிலத்திலும் ஆளுங்கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை வீழ்த்த இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள் என்றால் நம்முடைய சக்தி என்னவென்று பாருங்கள்.
தலைவர் கருணாநிதி இல்லை அதனால் கட்சியை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். தலைவர் மறைந்துவிட்டாலும் அவரால் உருவாக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அதை மறந்துவிடாதீர்கள். தலைவர் மறைந்துவிட்டாலும் எங்களைப் போன்ற உள்ளங்களில் அவர் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை மறந்து விடாதீர்கள்.
பழனிசாமி அவர்களே… மன்னிக்க வேண்டும். மிஸ்டர் பழனிசாமி அவர்களே… முதல்வர் பழனிசாமி அவர்களே… திமுகவை வீழ்த்த உங்கள் உயிரைத் தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீண்ட காலம் வாழுங்கள். விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்று திமுக ஆளுகின்ற காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் இந்த காங்கேயம் கூட்டத்தின் மூலமாக மிஸ்டர் பழனிசாமிக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக கட்டாயம் வரப்போவதில்லை. அவர்கள் வாஷ் அவுட். அதனைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நாம் பார்த்தோம்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT