Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM
கோவையில் விவசாயத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட தொகுதி தொண்டாமுத்தூர். சின்னவெங்காயம், வாழை, தென்னை, திராட்சை, பாக்கு, மஞ்சள், காய்கறிகள் சாகுபடி இங்கு அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கவுண்டர் சமுதாயத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒக்கலிக கவுடர், செட்டியார், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என பலதரப்பட்ட மக்களும், கணிசமான பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். மாநகரில் உள்ள குனியமுத்தூர், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம் பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பதால் கிராமங்கள்தோறும் சாலை வசதி, தெருவிளக்குகள், நொய்யல் ஆற்றை கடந்து செல்ல பாலங்கள், சமூகநலக்கூடங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொண்டாமுத்தூரில் புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.130 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
எதிர்ப்பார்ப்புகள் என்ன?
மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும்பாலான நீர் நகருக்குள் நுழைந்ததும் சாக்கடை நீருடன் கலந்து வீணாகிறது. எனவே, வெள்ளப் பெருக்கின்போது வரும் நீரை குழாய் மூலம் ‘பம்பிங்’ செய்து, குட்டைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் வழித்தடத்தில் அதிக தடுப்பணைகளை கட்ட வேண்டும். தூர்வாரிய குட்டைகளின் நீர்வழித்தடங்களை கண்டறிந்து மழைநீர் வந்துசேர வழிவகை செய்தால் விவசாய நிலங்கள் பயன்பெறும். வேளாண் விளைபொருட்களுக்கு, சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தைவாய்ப்பும் ஏற்படுத்தித்தர வேண்டும். மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய கிராமப் பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி, மயில் போன்றவை பயிர்களை சேதப்படுத்துகின்றன. யானை-மனித மோதலால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வனப்பகுதியை ஒட்டிய விதிமீறிய கட்டுமானங்கள் மீது நடவடிக்கை தேவை என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இயற்கை வளத்தை பாதுகாக்க ஆற்றுமணல், கிராவல் மண் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை. இங்குள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் வேலைவாய்ப்புக்காக கோவை நகருக்கும், திருப்பூருக்கும் செல்கின்றனர். இதை தவிர்க்க, உள்ளூரிலேயே சுய தொழில், விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை கொண்டுவர வேண்டும் என்பவை மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தொண்டாமுத்தூர் தொகுதியில் 1,61,915 ஆண்கள், 1,64,783 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 81 பேர் என மொத்தம் 3,26,779 வாக்காளர்கள் உள்ளனர். கடைசியாக 1996-ம் ஆண்டு திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக இங்கு போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி வெற்றிபெற்றார். அதன்பிறகு, தமிழ்மாநில காங்கிரஸ் (மூப்பனார்), மதிமுக வேட்பாளர்களும், 2009 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளனர். 2011, 2016-ம் ஆண்டு என தொடர்ந்து 2 முறை எஸ்.பி.வேலுமணி வெற்றிபெற்றுள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறைதான் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக களம்காண்கின்றனர்.
வெற்றிபெறும் முனைப்பில் வேட்பாளர்கள்
தொகுதிக்குள் வசிப்பவர், பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் அணுகி உதவி கேட்கலாம், வீட்டு விசேஷங்கள் தொடங்கி கட்சி நிகழ்வுகள் வரை அனைத்திலும் பங்குகொள்பவர், 10 ஆண்டுகளாக தொகுதி மக்களுடனான நெருக்கம் ஆகியவை எஸ்.பி.வேலுமணிக்கு பலம் சேர்க்கின்றன.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தமுறை கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்காமல் நேரடியாக களம் காண்பதும், கட்சித் தலைமை தொகுதியில் தனி கவனம் செலுத்துவதும் பலமாக திமுகவினர் கருதுகின்றனர்.
திமுக சார்பில் கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, காங்கேயம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். தொண்டாமுத்தூரில் போட்டியாளர் வலுவாக இருக்க வேண்டும் என்பதாலும், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அவரை இங்கு களமிறக்கியுள்ளது திமுக. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அவருக்கு கிடைத்த அறிமுகம் ஓரளவு கைகொடுக்கிறது.
‘கார்த்திகேய சிவசேனாபதி வெளியூர்காரர்’ என்பதை வைத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்துவருகின்றனர். எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கார்த்திகேய சிவசேனாபதி பிரச்சாரம் செய்துவருகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வெற்றி, தோல்வியை அந்த வாக்குகள் தீர்மானிக்கலாம். தொண்டாமுத்தூரை கைப்பற்றிவிட வேண்டும் என திமுகவும், தொகுதியை மீண்டும் தக்கவைக்கும் முனைப்பில் அதிமுகவும் தீவிரம் காட்டுகின்றன.
வேலைக்காக கோவை, திருப்பூருக்கு செல்வதை தவிர்க்க, உள்ளூரிலேயே சுய தொழில், விவசாய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT