Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதால் அவிநாசியில் மீண்டும் நம்பிக்கையுடன் களமிறங்கும் அதிமுக: 20 ஆண்டுகள் தொடர் வெற்றிக்கு அணை கட்டுமா திமுக?

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக நடைபெற்றுவரும் நீரேற்று உந்து நிலையப் பணிகள்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 41 ஆண்டுகள் தனித் தொகுதியாக இருப்பது அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி. அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 31 ஊராட்சிகள், கோவை மாவட்டம் அன்னூர்ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 ஊராட்சிகள் என 47 கிராம ஊராட்சிகளும், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூர் ஆகிய 3 பேரூராட்சிகளையும் உள்ளடக்கி யுள்ளது. அருந்ததியர், ஆதி திராவிடர்அதிகளவில் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக, கொங்கு வேளாளர்கள், நாயக்கர் மற்றும் இதர சமூகத்தினர் உள்ளனர். கொங்கு மண்டலத்திலுள்ள 7 சிவஸ்தலங்களில், பாடல் பெற்ற தலமாக அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலும், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோயிலும் பிரசித்தி பெற்றவை. அவிநாசி வட்டாரத்தில் விவசாயம், விசைத்தறி, பம்ப் செட் உற்பத்தி, உள்ளூர் பனியன் உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழில்களாக உள்ளன.

60 ஆண்டு கால கனவு

அவிநாசி தொகுதி மக்கள் எதிர்பார்த்த60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான விஷயம். பெருந்துறை - அன்னூர் வரை உள்ள 600 குட்டைகள் விடுபட்டுள்ளதாக பல கிராமங்களில் விவசாயிகள் குரல் எழுப்புகின்றனர். இதனையும் திட்டத்தில் இணைக்க வேண்டுமென பலர் எதிர்பார்க்கின்றனர். அவிநாசி, அன்னூர் பகுதி மக்களுக்கு பவானி ஆற்றுக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் ஒதுக்கீடு செய்த அளவுக்கு குடிநீர் வருவதில்லை. அன்னூர் - அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் என்பது ஆறுதல் தரும் விஷயம்.

எதிர்பார்ப்பு

திருமுருகன்பூண்டியில் சிற்பக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி ஏற்படுத்த வேண்டும். அவிநாசி ஊராட்சியை இரண்டாகப் பிரித்து சேவூரை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், சேவூரில் பேருந்து நிலையம், அவிநாசியை நகராட்சியாக்குதல், விசைத்தறி தொழிற்பேட்டை, புராதனக் கோயில் புனரமைப்பு, குளம், குட்டைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற வில்லை. சட்டப்பேரவைத் தலைவர் தொகுதி என்பதால் கூடுதல்முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், தட்டுப்பாடற்ற குடிநீருக்கு சிரமப்பட வேண்டியிருப்பதாக கருதுகின்றனர் தொகுதி மக்கள். தொழில் நலிவுக்குள்ளாகி வரும் அன்னூர் பகுதியிலுள்ள நூற்பாலைகளை மேம்படுத்த வேண்டும், தட்டுப்பாடற்ற குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக - திமுகவின் பலம், பலவீனம்

சட்டப்பேரவைத் தலைவர் தொகுதி என்பதால் தனி முக்கியத்துவம் பெற்றது. ஆனால், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் முக்கியத்துவம் பெறவில்லை என்கின்றனர் தொகுதி மக்கள். வெளியூரை சேர்ந்தவராக இருப்பினும், அதிமுக என்பதற்காக ப.தனபாலை ஆதரித்தாலும், மாதம் ஒருமுறை கூட மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை என குமுறுகின்றனர். இந்த முறை அவரே போட்டியிடுவதால் ராமியாம்பாளையம், கிளாங்குளம், அன்னூர் அருகே வடக்கலூர், மூப்பனூர் கிராமங்களில் தனபால் வாக்கு சேகரிக்க சென்றபோது, பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை காட்டினர். 20 ஆண்டுகளாக அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுகவில் யாருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதுபோதாதென்று, சீட் கிடைக்காத விரக்தியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏகருப்பசாமியும் தன் பங்குக்கு ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்துகிறார். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் மற்றும் பிரேமா, மகாலிங்கம், கருப்பசாமி, தற்போது தனபால் என கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக வசமே தொகுதி இருப்பது பலம்.

அவிநாசியில் திமுக கூட்டணி வேட்பாளரான ஆதித்தமிழர் பேரவையின்நிறுவனர் இரா.அதியமான் களப்பணி ஆற்றுகிறார். இவர் கோவை மாநகரைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, பிற சமூகத்தினர் குறித்து அவதூறாக அதியமான் பேசிய வீடியோவை தொகுதிக்குள் வேகமாக பரப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குவங்கி சிதறும் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளது. ஆனால், திமுக சின்னத்தில் அதியமான் நிற்பது அவருக்கு பலம்.1996-ம் ஆண்டு திமுகவுக்கு அடித்த பெரும் அலையில் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

அதன்பின் திமுக வெற்றியை ருசிக்கவில்லை.திமுகவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆனந்தன் வேலை செய்து கொண்டிருந்தார். சீட் கிடைக்காத விரக்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அக்கட்சியினர். இதெல்லாம் இருதரப்புக்குமான பலம்,பலவீனங்களாக உள்ளன. மக்கள் நீதி மய்யத்தில் மருத்துவர் வெங்கடேஷ்வரன், அவிநாசி தொகுதிக்கு அப்பாற்பட்டவர்தான். தேமுதிக மீரா, நாம் தமிழர் கட்சி ஷோபா ஆகியோர் அவிநாசி தொகுதியைச் சேர்ந்தவர்கள். அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தங்களை கரைசேர்க்கும் என ஆழமாக நம்புகிறார்கள் அதிமுகவினர். அவர்களின் நம்பிக்கை வெற்றி தருமா அல்லது எதிர்க்கட்சிகளின் பிரச்சார வியூகம் எடுபடுமா என்பது தேர்தல் முடிந்த பின் தான் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x