Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM
பாஜகவில் சேர்ந்த கையோடு திருக்கோவிலூர் அருகே மாரங்கியூர் கிராமத்தில் பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஏ.ஜி.சம்பத். ‘ஏ.ஜி.சம்பத்’ விழுப்புரம் மாவட்ட அரசியலை உற்று நோக்கி வருவோர் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர்.
மாவட்ட முன்னாள் திமுக செயலாளர். முகையூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு கடந்த 1989 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, இவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, பொன்முடிக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் முகையூர் தொகுதியில் போட்டியிட ஏ.ஜி.சம்பத் கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்தார். ஆனால் முகையூர் தொகுதி பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டது.
அதிருப்தியடைந்த சம்பத், 2006ம்ஆண்டு சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு, தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று தனது செல்வாக்கை நிரூபித்தார்.
பின்னர் அவர், திமுகவில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார். அங்கு, மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் தீர்மானக்குழு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனால், திமுகவில் சீட் தரப்படவில்லை.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சென்னையில் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இது குறித்து ஏ.ஜி.சம்பத்திடம் கேட்டதற்கு, “21 ஆண்டுகளாக திமுகவில் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி அளித்தனர். தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இது குறித்து சொல்லப்படவில்லை. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கிடு வழங்கப்படும் என அறிவித்து விட்டு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை தற்போது கிண்டல் செய்து வருகின்றனர்.
என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைகிறேன். திருக்கோவிலூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கும் பொன்முடிக்கும் போட்டி அல்ல. எனக்கும் பொன்முடிக்கும்தான் போட்டி. களம் மாறுகிறது” என்று கூறியவர்,
நேற்றே பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து திருக்கோவிலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் இறங்கினார்.
உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த இவரது தந்தை ஏ.கோவிந்தசாமி, திமுகவின் முதல் எம்எல்ஏவாக தமிழக சட்டசபைக்கு சென்றவர் என்பதும், இவரது கட்சிக்கு சொந்தமான உதயசூரியன் சின்னத்தை திமுகவிற்கு வழங்கினார் என்பது மறக்க முடியாத பழைய வரலாறு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT