Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக, திமுக, மநீம. கட்சிகளின் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் பழநி, ஒட்டன் சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆத்தூர் தொகுதியில் திமுகவை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியும், திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், நிலக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணியில் மக்கள் விடுதலைக்கட்சி வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக ஒரு தொகுதியையும், திமுக இரண்டு தொகுதிகளையும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. ஆத்தூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமா, ஆத்தூர் தொகுதியை சேர்ந்தவரோ, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரோஅல்லாமல் வெளிமாவட்டமான விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவராக உள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன்,மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்தவர். இரண்டு தொகுதிகளை அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ஒதுக்கிய நிலையில் இரண்டு தொகுதிகளிலும் வெளிமாவட்ட வேட்பாளர்களை கூட்டணிக் கட்சிகள் நிறுத்தியுள்ளன.
இதனால் தொகுதியில் உள்ள அவர்களது கட்சியை சேர்ந்தவர்களின் ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆதரவு குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. எனவே ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வெளிமாவட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில், தொகுதியில் உள்ள தங்கள் கட்சி பிரமுகர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு குறைவாகவே காணப்படுவதால் பிரச்சாரத்தில் திணறி வருகின்றனர்.
இதேபோல் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதியில் குறிஞ்சிவீரர்கள் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளர் ஆனந்த், சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர். புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அய்யர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவராக உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT