Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM
ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி-2022 பருவத்தில் 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1.1.2022 அன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, 1.1.2022-ல் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
இதற்கான எழுத்துத் தேர்வு 5.6.2021 அன்றும், நேர்முகத் தேர்வு 6.10.2021 அன்றும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு ‘கமாண்டன்ட்’ ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்ரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண்: 248003’ என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமான்டன்ட், ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன் அவர்களுக்கு உத்தராகன்ட் டேராடூன், டெல்பவன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் (வங்கி குறியீடு 1576) செலுத்தத்தக்க பொதுப்பிரிவினர் ரூ.600-க்கான மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555- க்கான கேட்பு வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டை பிரதிகளில்) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர் சென்னை-600 003 என்ற முகவரிக்கு வரும் 15.4.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். மற்ற விவரங்களுக்கு ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in ஐ பார்க்கவும். மேலும் விவரம் அறிய ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை அலுவலக நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (04567-230045) தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT