Published : 27 Mar 2021 05:26 PM
Last Updated : 27 Mar 2021 05:26 PM
தாராபுரம் வளர்ச்சி அடையத் தாமரைக்கு வாக்களியுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தொகுதி மக்களிடையே இன்று பிரச்சாரம் செய்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களில் தாராபுரம் அருகே மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து சூரியநல்லூர் பகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட எல்.முருகன் வீடு வீடாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
இதைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்த அவர், ''தாராபுரம் வளர்ச்சி அடையத் தாமரைக்கு வாக்களியுங்கள். ஏனெனில் மத்திய அரசும், மாநில அரசும் இத்தனை ஆண்டுகளாக இணைந்து இருப்பதால் தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் அதேபோல தாராபுரம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான போக்கை கடைப்பிடிக்கின்ற எம்எல்ஏ இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்தப் பகுதியை முன்னேறிய நகரமாக மாற்ற முடியும்.
தாராபுரத்தில் ஒரு அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. அதேபோல இங்கு ரயில் வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவை அனைத்தும் மத்திய, மாநில அரசுகள் கொடுக்கக்கூடியவை, அதனால் நல்ல நலத் திட்டங்கள் நமக்கு வர வேண்டுமென்றால் மக்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று எல்.முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT