Published : 27 Mar 2021 04:32 PM
Last Updated : 27 Mar 2021 04:32 PM
புதுச்சேரிக்கு வரும் பிரதமரிடம் மாநில அந்தஸ்து தொடர்பாக வலியுறுத்துவோம் என அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளரும், எம்எல்ஏவும், உப்பளம் தொகுதி வேட்பாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் (மார்ச் 27) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் - திமுக கூட்டணி எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாததால் வருகிற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு இணக்கமான ஆட்சி இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும். மத்தியில் இருந்து வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதிமுக, என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டுவர மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உப்பளத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் தோல்வி பயத்தில் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறி காவல்துறையின் துணையோடு அதிமுக தொண்டர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய தினம் உப்பளம் தொகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள் துணையோடு ஆங்காங்கே ஓட்டுக்கு ரூ.1,000 பணம் விநியோகம் செய்துள்ளனர். இதனைக் காவல்துறையும் கேட்பதில்லை. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களே பணம் விநியோகிப்பவரைப் பிடித்துக் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.
காவல்துறையும், தேர்தல் துறையும் சரியான பாதையில் செல்லவில்லை. திமுகவினர் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பணம் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். தற்போது ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். இது நேர்மையான தேர்தலாகத் தெரியவில்லை.
இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். முறையான தேர்தல் நடத்த வேண்டும் என்றால் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். ஆனால், காவல்துறையின் செயல்பாடு சரியாக இல்லை. அவர்கள் குறிவைத்து அதிமுக தொண்டர்களை மட்டுமே கண்காணிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக வேட்பாளர் மத ரீதியாக மக்களைப் பிரித்து வாக்குக் கேட்டு வருகிறார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி மிகப்பெரிய குற்றம். இதுகுறித்துப் பல முறை புகார் கூறியுள்ளோம். இதனைப் புதுச்சேரி தேர்தல் ஆணையம் கண்காணித்து, திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். கூட்டணி ஆட்சி அமைந்த 6 மாதத்தில் மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம். நீண்ட காலமாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், திமுக மாநில நலனில் அக்கறை கொள்ளவில்லை. தற்போது தேர்தல் வரவே மாநில அந்தஸ்து என்கிற பொய் கோஷத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி எழுப்பியுள்ளார்.
5 ஆண்டு காலம் முதல்வராக இருந்த நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமல் பயந்து ஓடுகிறார். அவர் எதிர்க்கட்சிகளைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஓரிரு தினங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். புதுச்சேரிக்கு வரும் பிரதமரிடம் மாநில அந்தஸ்து தொடர்பாக வலியுறுத்துவோம்.’’
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment