Published : 27 Mar 2021 03:33 PM
Last Updated : 27 Mar 2021 03:33 PM
சில கட்சிகளின் கொடிகளோடு வருபவர்களுக்கு சில கிராமங்களில் எதிர்ப்பு கிளம்புவதால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரைவத் தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளும், அதிமுக தலைையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.
மேற்கண்டக் கட்சிகள் வாக்குகள் சேகரிக்கும் பணியில் கட்சித் தொண்டர்கள் புடை சூழ கட்சிக் கொடி மற்றும் சின்னத்தின் பதாகையை ஏந்தி ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சில கிராமங்களில் கட்சிக் கொடி ஏந்தி வரும்போது, கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியினரை கூட்டணியில் உள்ள சில கட்சிக் கொடிகளை கட்டிக் கொண்டு குறிப்பிட்ட கிராமத்திற்கு வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதோடு, அந்த குறிப்பிட்ட கிராமத்தில் வாக்கு சேகரித்து விட்டு வரும்வரை மற்ற கிராமத்தில் காத்திருங்கள் என கேட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
அண்மையில் கடலூர் தொகுதியில் அமைச்சர் சம்பத் அதிமுக சார்பில் வாக்கு சேகரிக்க கடலூரை அடுத்த சிங்குரிகுடிக்குச் சென்று வேறு கிராமத்திற்குச் செல்லும்போது, பாமக கொடியுடன் வரவேண்டாம் எனவும் அந்த கிராமத்தில் வாக்கு கேட்டுவிட்டு அடுத்த கிராமத்திற்கு வரும்போது வந்தால் போதும் எனவும் பாமகவினரை தவிர்த்துச் சென்றனர்.
இதேநிலை தான் திமுகவினர், வன்னியர் அதிகம் நிறைந்த பகுதியில் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏந்திக் கொண்டு வரவேண்டாம் என தவிர்த்து விடுகின்றனர்.
விருத்தாசலம் தொகுதிக்குப்பட்ட மங்கலம்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர் பாஜக கொடியையும், பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் பகுதியில் முஸ்லிம் மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜக கொடியையும் தவிர்த்து வாக்கு சேகரிக்கும் நிலை உள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளால் கூட்டணிக் கட்சிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியிருப்பதாக கட்சி மேலிட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT