Published : 27 Mar 2021 02:46 PM
Last Updated : 27 Mar 2021 02:46 PM

அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்திருக்கிறது: கனிமொழி விமர்சனம்

கனிமொழி பிரச்சாரம்.

நாகப்பட்டினம்

தமிழகம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது உரிய நிவாரணத்தை தமிழக அரசால் கேட்டுப் பெற முடிந்ததா என, மக்களவை திமுக உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில், நாகப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதி திமுக கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷாநவாஸை ஆதரித்து, கனிமொழி எம்.பி. இன்று (மார்ச் 27) வாக்கு சேகரித்துப் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:

"எல்லோராலும் படிக்க முடியும் என்ற நினைப்பை கொண்டு வந்தவை திராவிட கட்சிகள். நம் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் மருத்துக் கல்லூரிகளை கொண்டு வந்த கட்சி திமுக. ஆனால், தற்போது நம் பிள்ளைகளை மருத்துவம் படிக்க விடாமல் நீட் தேர்வை கொண்டு வந்த கட்சி பாஜக. இதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

நீட் தேர்வை ஆதரித்து வாக்களித்த கட்சி அதிமுக. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுன்சிலராக கூட தகுதி இல்லாதவர் முதல்வராகி விட்டார் என்று விமர்சனம் செய்தார். பாஜகவும் அதிமுகவை விமர்சனம் செய்து இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் பதவி மேல் உள்ள வெறியால் சந்தர்ப்பவாத கூட்டணியை வைத்திருக்கிறது அதிமுக.

மத்திய அரசுடன் ஒத்துப்போனால்தான் நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முடியும் என்றார் பழனிசாமி. ஜிஎஸ்டி சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.15 ஆயிரத்து 475 கோடி நிலுவைத் தொகையை அரசால் கேட்டு வாங்க முடியவில்லை. பிறகு எதற்காக அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும். தமிழகம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது உரிய நிவாரணத்தைக் கேட்டுப் பெற முடிந்ததா இவர்களால்?

கடந்த 10 ஆண்டுகளாக பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சியில் 250 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள். புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்ற பெண்கள் காவல்துறை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்கள். நியாயம் கேட்டு சென்ற ஒரு பெண்ணின் சகோதரர் அடித்து விரட்டப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டம் தோறும் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்சாரம் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் முறையிட்டார்கள். அதற்கு அவர் நாங்களே தீப்பந்தத்தில்தான் இருந்தோம். 2, 3 நாட்கள் உங்களால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாதா என்றார். வயலில் கொஞ்சம்போல் தான் தண்ணீர் நிற்கிறது, பெரிய பாதிப்பு இல்லை என்றார். அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டபோது, சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். அவரை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக இளையராஜா என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது அதிமுக ஆட்சி.

ரூ.7,500 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் தலைவர் கருணாநிதி. இலவச மின்சாரம் தந்தது தலைவர் கருணாநிதி. ஆனால், தன்னை விவசாயி என்று கூறி கொள்ளும் பழனிசாமி இலவச மின்சாரத்தை நிறுத்தினார். ஊரடங்கின்போது பொதுமக்களுக்கு தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின். ஆனால் ரூ.1,000 தான் கொடுத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் மீதமுள்ள ரூ.4,000 வழங்கப்படும்".

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், எம்.பி. செல்வராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர், சிக்கல் சென்ற கனிமொழி எம்.பி., கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து வாக்கு சேகரித்துப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x