Published : 27 Mar 2021 02:14 PM
Last Updated : 27 Mar 2021 02:14 PM

பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது கண்டிக்கத்தக்கது: திமுக கொபசெ லியோனிக்கு கனிமொழி மறைமுக கண்டனம்

சென்னை

சில நாட்களுக்கு முன் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி, பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று கனிமொழி பொதுவாகப் பதிவு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களிலோ, பொதுவெளியிலோ முதலில் பரிகாசத்துக்கும், இழிவுக்கும் ஆளாக்கப்படுவது பெண்களே. அரசியலுக்கு வரும் பெண் தலைவர்களை ஆபாசமாகப் பேசுவது, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிப்பது, சம்பந்தப்படுத்திப் பேசுவது, இழிவாக விமர்சிப்பது என்று பலவித விமர்சனங்களைப் பெண்கள் சந்திப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

மற்றொரு விமர்சனம் உடல் குறைபாட்டைச் சொல்லி விமர்சிப்பது. மாற்றுத்திறனாளிகள் எனப் பொதுவாக அழைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் சிலர் விமர்சித்து சிக்கலைச் சந்தித்துள்ளனர். குஷ்புவும், திருமாவளவனும் உடல் குறைபாட்டைக் குறிக்கும் வண்ணம் பேசி, பின்னர் வருத்தம் தெரிவித்த நிகழ்வு அண்மைக் காலத்தில் நடந்தது. இன்னும் சிலர் அறிவியலுக்குப் புறம்பாகப் பேசுவது வாடிக்கையாக உள்ளது. சிலர் சமூகங்களை, மதத்தை விமர்சித்துப் பேசுவதும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

மற்ற நேரங்களை விடத் தேர்தல் நேரங்களில் இதுபோன்ற விமர்சனப் பேச்சுகள் வாக்குகளையே பாதிக்கும் விதத்தில் உள்ளதைக் கருத்தில்கொண்டு அரசியல் கட்சியினர் கவனமாகச் செயல்பட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசி சர்ச்சையில் சிக்குவதும் நடக்கிறது.

சமீபத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றது குறித்தும், சசிகலா காலில் விழுந்தது குறித்துப் பேசியதும் சர்ச்சையானது. சமீபத்தில் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திமுக தேர்தல் அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கொச்சையாக அதன் தேவை குறித்த புரிதல் இல்லாமல் பேசியதும் சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

முதல்வரைக் கண்டபடி தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசுவதும் பொதுமக்களால் முகச்சுளிப்போடு பார்க்கப்படுகிறது. திமுக கொள்கை பரப்புச் செயலாளர், முக்கியப் பேச்சாளர்களில் ஒருவர், பட்டிமன்றப் புகழ் திண்டுக்கல் லியோனி. இவர் அண்மையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வெளிநாட்டு மாட்டுப் பாலைக் குடிச்சு குடிச்சு நம்ம ஊரு பெண்கள் பலூன் மாதிரி இத்தா தண்டி ஊதிக் கிடக்குறாங்க. அவங்களோட பிள்ளைகளும் அதே மாதிரி ஊதிக் கிடக்குறாங்க. ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும். குழந்தைகளைத் தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்துக்குவான். 8 போல் இருந்த இடுப்பு ஃபாரீன் மாட்டுப் பாலைக் குடிச்சு குடிச்சு பேரல் போல் ஆகிவிட்டது” எனப் பேசினார்.

திமுக பேச்சாளர் லியோனியின் இந்தப் பேச்சுக்கு பெண்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இது திமுக தலைவர்களுக்குச் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தொண்டாமுதூர் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ''லியோனி அப்படிப் பேசியிருக்கக் கூடாது. தவிர்த்திருக்க வேண்டும்'' என என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விஷயங்களை உடனடியாகக் கண்டிக்கும் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, இதுகுறித்து மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுக் கண்டித்துள்ளார். அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்கள் குறித்துத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பேசுவது கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டுள்ளார்.

கனிமொழியின் ட்விட்டர் பதிவு:

“அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.

இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்தச் சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூக நீதி ஆகும்”.

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

லியோனியின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் பேசிய கருத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளதாக இது பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x