Published : 27 Mar 2021 12:45 PM
Last Updated : 27 Mar 2021 12:45 PM

குறுகிய நேரத்தில் அடுத்தடுத்த இடங்களில் என் கார் சோதனையிடப்பட்டது; சோதனையிட்ட சான்றிதழ் அளித்தால் சிக்கல் வராது: தேர்தல் ஆணையத்திடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

சென்னை

குறுகிய நேரத்தில் அடுத்தடுத்த இடங்களில் எனது கார் சோதனையிடப்பட்டது. எம்.பி.யின் கார் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும் குறுகிய இடைவெளியில் நடத்தப்படும் சோதனையால் நேர விரயம் எனத் தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு புகார் அனுப்பியுள்ளார்.

திமுக பொருளாளராகவும், நாடாளுமன்ற திமுக குழுவின் தலைவராகவும் இருப்பவர் டி.ஆர்.பாலு. இவர் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று காலை டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் ஒரு புகாரை அனுப்பியுள்ளார். அதில் தனது வாகனம் இரு முறை சோதனையிடப்பட்டது என்றும் அதுகுறித்துப் புகார் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த புகார் விவராம்:

“உங்கள் கவனத்துக்கு, அவசரமாக இன்று காலை நடந்த விரும்பத்தகாத நிகழ்வு ஒன்றைக் கொண்டுவர விரும்புகிறேன். இன்று காலை 6.50 மணி அளவில் எனது காரை லயோலா கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். மீண்டும் காலை 9.10 மணி அளவில் மதுரவாயல் 150 வார்டு அருகே பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் நேரத்தில் எனது கார் சோதனையிடப்பட்டது.

எனது காரில் நட்சத்திர பிரச்சாரகர் ஸ்டிக்கரும், மக்களவை உறுப்பினருக்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. ஆனாலும், பறக்கும் படையினர் எனது காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதை நான் அனுமதிக்கவும் செய்தேன். அவர்களது பணியை நான் பாராட்டவும் செய்கிறேன்.

ஆனால், அதே வேளையில் அவர்களது செயலை நான் கண்டித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஒரே காரைக் குறுகிய இடைவெளியில் இரண்டு முறை சோதிப்பது என்பது நேர விரயம். குறைந்தபட்சம் சோதனையிட்டு எதுவும் இல்லை என்றால் பரிசோதிக்கப்பட்டது என்று சான்றிதழாவது வழங்கலாம்.

ஆகவே, இதுபோன்ற சம்பவங்களைக் கணக்கில் எடுத்து தாங்கள் உரிய வழிகாட்டுதலை உடனடியாகப் பிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு டி.ஆர்.பாலு ஆன்லைன் புகாரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x