Last Updated : 27 Mar, 2021 08:03 AM

4  

Published : 27 Mar 2021 08:03 AM
Last Updated : 27 Mar 2021 08:03 AM

காரைக்குடியில் வெல்வாரா ஹெச்.ராஜா?

சிவகங்கை மாவட்டத்தில் கட்டிடக்கலை, பலகாரம், சமையல், கண்டாங்கி சேலை போன்றவைக்கு புகழ்பெற்ற செட்டிநாடு பகுதிகளை உள்ளடக்கியது காரைக்குடி தொகுதி. இங்கு தமிழ் தாய்க்கென கோயில் உள்ளது. காரைக்குடி தொகுதியில் காரைக்குடி தேவகோட்டை ஆகிய 2 நகராட்சிகள், புதுவயல், கண்டனூர் ஆகிய 2 பேரூராட்சிகள், சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகள் மற்றும் கல்லல் ஒன்றியத்தில் உள்ள பகுதியளவு ஊராட்சிகள் உள்ளன.

இங்கு 1,54,905 ஆண்கள், 1,60,399 பெண்கள், 47 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,15,351 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் 1952 முதல் நடந்த தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ் தலா 4 முறையும், திமுக 3 முறையும், சுதந்திரா கட்சி 2 முறையும், தமாகா, பாஜக தலா ஒருமுறையும் வென்றுள்ளன.

காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். சட்டக்கல்லூரி, விவசாயக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். கைவிடப்பட்ட சிப்காட் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தேவகோட்டையில் அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் போன்றவை இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான உள்ளன.

இங்கு அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். இவர், இதே தொகுதியில் 2001-ல் திமுக கூட்டணியில் வென்றுள்ளார். ஏற்கெனவே இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் என்பதால் அனைவருக்கும் அறிமுகமானவராக உள்ளார். இதற்கு முன்பு பாஜகவின் தேசிய செயலாளர் பதவியை வகித்தவர் என்பதால், மேலிடத் தலைவர்களை எளிதில் அணுகக்கூடியவர். மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, முதல்வர் பழனிசாமி போன்றோர் இவருக்காக பிரச்சாரம் செய்துள்ளனர். பிரதமர், முதல்வரிடம் நேரடியாக பேசி முக்கிய திட்டங்களை காரைக்குடிக்கு கொண்டு வர தங்களால் முடியும் என ஹெச்.ராஜாவின் ஆதரவாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், இத்தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டியிடுவார் என எதிர்பார்த்து அக்கட்சியினர் ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கினர். இந்நிலையில் காரைக்குடி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் தேர்தல் பணியில் வேகம் காட்டாமல் இருக்கின்றனர். இது ஹெச்.ராஜா தரப்பினருக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். இதற்கு முன்பு சங்கராபுரத்தில் ஊராட்சித் தலைவராக மாங்குடி இருந்துள்ளார். மாங்குடிக்கு ஆதரவாக ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் தொகுதி முழுவதும் பம்பரமாகச் சுற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொகுதியில் போட்டியிட திமுக முயற்சித்து வருகிறது. இந்த முறையும் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கியதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேட்பாளர் மாங்குடிக்கு திமுகவினரின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை.

இந்நிலையில், அமமுக சார்பில் களமிறங்கியுள்ள மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 1,22,534 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். இதில் காரைக்குடியில்தான் அதிக வாக்குகள் பெற்றார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார். காரைக்குடியில் அதிமுக நிற்காததால், அக்கட்சியினரின் வாக்குகளையும், முக்குலத்தோர் வாக்குகளையும் பெற முயற்சித்து வருகிறார். தேர்
போகி பாண்டியின் தீவிர தேர்தல் பணி, பாஜக, காங்கிரஸாருக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர மக்கள் நீதி மய்யம் சார்பில் சமூக ஆர்வலர் ராஜ்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் துரைமாணிக்கமும் போட்டியிடுகின்றனர். அவர்கள் தங்களது சமூகப் பணிகளை நம்பி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மும்முனைப் போட்டி

தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி காணப்படுகிறது. ஆனால் காரைக்குடியை பொறுத்தவரை, இரு பிரதான வேட்பாளர்களுக்கும் கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் அமமுகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மும்முனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் கடும் சவாலை சந்திக்கிறார் ஹெச்.ராஜா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x