Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிப்பதில் தொடரும் இழுபறி: குன்னூர் தொகுதி மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறுமா?

குன்னூர்

தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிப்பதில் தொடரும் இழுபறி நீலகிரி மாவட்டத்தில் தனித்தொகுதியாக இருந்த குன்னூர், கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

2008-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள் கோத்தகிரி வட்டம், குன்னூர் வட்டம், எட்டப்பள்ளி, பர்லியாறு, குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள், அருவங்காடு, வெலிங்டன், குன்னூர் நகராட்சி, அதிகரட்டி மற்றும் உலிக்கல் பேரூராட்சிகள். மத்திய அரசின் பாஸ்டியர் ஆய்வகம்,அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலைகள் ஆகியவை, குன்னூர் தொகுதியின் அடையாளங்கள். இத்தொகுதிக்கு உட்பட்டு குன்னூர், கோத்தகிரி ஆகிய இரு தாலுகாக்கள் உள்ளன.பிரதானத் தொழிலாக காய்கறி, தேயிலை விவசாயம் விளங்குகின்றன. படுகரினமக்களுக்கு அடுத்ததாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இருளர், குரும்பர் பழங்குடியினரும், கணிசமாக தாயகம் திரும்பியோரும் வசிக்கின்றனர்.

விற்கப்படும் தேயிலை தோட்டங்கள்

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்த தொகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலாளர்கள். குன்னூரில் அரசு மற்றும் தனியார் தேயிலை ஏல மையங்கள் உள்ளதால், தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களும் அமைந்துள்ளன. தேயிலைத் தொழிலை சார்ந்து ஒரு லட்சம் பேர் உள்ளனர். பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்குபவர்கள், தேயிலை தோட்டங்களை அழித்து ஆடம்பர பங்களாக்களை எழுப்பி வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பை இழந்து, பிழைப்பு தேடி சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். மிகவும் குறுகிய நகரமான குன்னூரின் பிரதான பிரச்சினை ஆக்கிரமிப்பு மற்றும் தண்ணீர்.

குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நகரின் நுழைவுவாயில், மலை ரயில் பாதையாக உள்ளது. காலை 10 மற்றும் மதியம் 3 மணிக்கு மலை ரயில் வரும்போது நுழைவுவாயில் மூடப்படுவதால், தினமும் இங்கு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இங்குமேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பசுந்தேயிலைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நேரங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டாலும், இதுவரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

சிரமப்படும் டான்டீ தொழிலாளர்கள்

தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டான்டீ எனப்படும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம், குன்னூரைதலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை மிகவும் துயரமாக உள்ளது.நீண்ட காலமாக அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. தொழிலாளர்கள் வசிக்கும் ஏராளமான குடியிருப்புகளில் கழிவறை பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பழுதடைந்துள்ள வீடுகளில் வசிக்கும் நிலையும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்புக்கான ஊதிய நிலுவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாகபணி வழங்கப்படாததால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தண்ணீர் தீர்வும், சாலை வசதியும்

கோடை காலங்களில், நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக குன்னூர் நகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை மேலோங்கும். இந்நிலையில், நகரின் தண்ணீர் தேவையைப் போக்க, 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எமரால்டு அணையிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர், தற்போது தண்ணீர் கொண்டு வர சோதனை ஓட்டம்நடத்தப்படுகிறது. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமப் பகுதிகளுக்கு சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் தொகுதிமக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் வழங்கியுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய அமமுக மாவட்ட செயலாளருமான எஸ்.கலைச்செல்வனும் களத்தில் உள்ளார். உள்ளூர்வாசியான இவர் அதிமுகவின் வாக்குகளைபிரிப்பார் என்பதால், யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

களம் காணும் வேட்பாளர்கள்

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், திமுக சார்பில் க.ராமச்சந்திரன், அமமுக சார்பில் எஸ்.கலைச்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஹெச்.பி.ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் லாவண்யா மோகன் மற்றும் 5 சுயேச்சைகள் என 10 பேர் களத்தில் உள்ளனர். குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி 1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. அதிகபட்சமாக 9 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வென்றுள்ளன. திமுகவின் கோட்டையாக கருதப்படும் குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியை, கடந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. 2006-ல் சவுந்திரபாண்டின் (திமுக),2011-ல் க.ராமச்சந்திரன் (திமுக) வெற்றி பெற்றிருந்தனர். 2016 தேர்தலில் நோட்டாவுக்கு 2,283 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x