Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

மறுசீரமைப்புக்குப் பிறகு 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருப்பூர் வடக்கு தொகுதியில் வெற்றியை தொடங்குமா திமுக? - மீண்டும் கைப்பற்ற அதிமுக தீவிர பிரச்சாரம்

திருப்பூர் மாநகர். (கோப்பு படம்)

திருப்பூர்

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதிக்குள் திருப்பூர் வட்டம் சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், பட்டம்பாளையம், பெருமாநல்லூர், வள்ளிபுரம், ஈட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளை யம், காளிபாளையம், மண்ணரை ஆகிய கிராமப் பகுதிகளும் ,செட்டிபாளையம், நெரிப்பெரிச்சல், தொட்டிபாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய நகர்ப்புறப் பகுதிகளும், மாநகராட்சியின் 29 வார்டுகளும் இடம்பெற்றுள்ளன. காந்தி நகர், அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, குமார் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய மாவட்டத்தின் பெரிய தொகுதி இது. அதிகளவில் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பிரதானத் தொழிலாக பின்னலாடை உற்பத்தி மற்றும் விவசாயம் உள்ளது. கொங்கு வேளாளர், முதலியார் மற்றும் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

2011 தேர்தலில் அதிமுகவின் எம்.எஸ்.எம்.ஆனந்தனும், 2016-ல் கே.என்.விஜயகுமாரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரச்சினைகள்

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது, 4-வது குடிநீர் திட்டப் பணிகள், பெருமாநல்லூர் பகுதியில் கூடுதலாக பேருந்து நிலையம் அமைக்காமல் இருப்பது, மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த ஊராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் சரிவர நியமிக்கப்படாமல் இருப்பதால் சுகாதாரப் பணிகள் பாதிப்பு உட்பட புகார்களும், பிரச்சினைகளும் உள்ளன. பின்னலாடைத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் மட்டும் நாட்டினார். அதன்பிறகு ஒரு செங்கல்கூட இதுவரை எடுத்துவைக்கப்படவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் பெரும் பகுதி தெற்கு தொகுதிக்குள் வருவதால், வடக்கு தொகுதி பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டும் உள்ளது.

எதிர்பார்ப்பு

வடக்கு பகுதிக்கென தனியாக அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும். பின்னலாடைத் தொழில் துறையினர் சார்பில் வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள், மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம், ஊத்துக்குளி சாலை, கொங்கு பிரதான சாலையில் போக்குவரத்து சீரமைப்பு, தேங்கிக் கிடக்கும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களையும், தொகுதிக்குள் செய்த கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளையும் தற்போதைய எம்எல்ஏ விஜயகுமார் பட்டியலிடுகிறார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலமாக பல ஊராட்சிகளுக்கு பலன், 10 ஊராட்சி பகுதிகளுக்கு ரூ.71 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் அன்னூர்-மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், திருப்பூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புஷ்பா சந்திப்பு முதல் பாண்டியன் நகர் வரை ரூ.900 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்ட ஒப்புதல் உட்பட பல்வேறு விஷயங்கள் தனக்கு சாதகம் என நம்பிக்கையுடன் உள்ளார்.

அதேசமயம், தொகுதிக்குள் இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை கட்டாமல் இருப்பது, வடக்கு பகுதி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவராமல் இருப்பது உட்பட பல்வேறு குறைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டியலிடுகிறது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதியில் பணிபுரிய திமுகவினர் சென்றுவிடுவதால், கூட்டணி வேட்பாளருக்கான பிரச்சாரத்தின் தீவிரம் சற்று குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அமைப்புரீதியாக திருப்பூர் வடக்கில் பலமாக உள்ள அதிமுக, தொகுதிக்குள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

இருவரும் தொடர்ந்து போட்டியிடுவதால், தொகுதிக்குள் அறிமுகம் உண்டு. அதேசமயம், மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிடும் சு.சிவபாலன், மதிமுகவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் என்ற முறையில் நன்கு அறிமுகமானவர். அமமுக கூட்டணியில் செல்வக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.ஈஸ்வரனும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் உறுதிமொழிக்கு மக்களின் மனத் தராசில் என்ன மதிப்பு என்பது இன்னும் களம் சூடுபிடிக்கும் போதுதான் கண்டறிய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x