Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
விக்கிரவாண்டியில் அரசு கலைக் கல்லூரி, விழுப்புரத்தில் சிப்காட் கொண்டு வரப்படும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.
விழுப்புரம் அருகே கெடாரில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி, கோலியனூரில் விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரை ஆதரித்து நேற்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசியது:
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதையும் பெரிதாக செய்துவிடவில்லை. பயனில்லாத ஒரு ஆட்சியாகத்தான் பழனிசாமியின் ஆட்சி இருந்தது.திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் இருந்தால்தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் தமிழகம் 14ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் முகக்கவசம், சானிடைசர், ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவைகள் வாங்குவதிலும்கூட, தமிழக அரசு பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறது. தமிழக அரசு ரூ.5 லட்சத்து 77 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.63 ஆயிரம் கடன் உள்ளது.தமிழை பேசக்கூடியவர்கள் யாரும்இன்றைக்கு தமிழக அரசின் பணிகளில் இல்லை. எங்கு பார்த்தாலும் வட மாநில த்தவர்களே இருக்கிறார்கள்.
மருத்துவ படிப்பில் நீட் தேர்வை கொண்டு வந்ததைப் போலவே, இன்றைக்கு எல்லாகல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள்.விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த பாஜகவோடு, அதிமுக கைகோர்த்து, தேர்தலை சந்திக்கிறது. அதிமுகவுக்கு நாம் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு போடுகிற ஓட்டாகத்தான் கருத முடிகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஸ்கூட்டி, செல்போன் போன்றவை எல்லாம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் கொடுத்தார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
விக்கிரவாண்டியில் அரசு கலைக்கல்லூரி, விழுப்புரத்தில் சிப்காட் கொண்டு வரப்படும். தொழிற்சாலைகளில் 75 சதவீத பணியிடங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும். இன்றைக்கு தொழிற்சாலைகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. அது முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT