Published : 27 Mar 2021 03:15 AM
Last Updated : 27 Mar 2021 03:15 AM

2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்று தபால் வாக்களித்த தேர்தல் பணி ஊழியர்கள்

திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் தபால் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். (வலது) தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தபால் வாக்குப்பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்திய காவல் துறையினர்.படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று தபால் வாக்கு செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத் தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது.

வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தொடங்கி வைத்தார்.

முதற்கட்ட பயிற்சியின்போது தபால் வாக்களிக்க விண்ணப்பித்த வர்களுக்கு நேற்றைய பயிற்சியின் முடிவில் தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடங்களில் இதற்காக தொகுதி வாரியாக தபால் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அப்பெட்டி களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் தபால் வாக்கை செலுத்தினர். சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியர் வே.விஷ்ணு பார்வையிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 10,066 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடவுள்ளனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக் கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று 6 தொகுதிகளிலும் 6 இடங்களில் நடைபெற்றது. இந்த இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6 தொகுதிகளுக்கான வாக்குச்சீட்டுகள், உறைகள், சீல் போன்றவை தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பெற்று, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்களித்தனர். தூத்துக் குடி காமராஜ் கல்லூரியில் இப்பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரான சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் ஆகியோர் பார்வையிட்டனர்.

காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் வந்து வரிசையில் காத்திருந்து தபால் வாக்களித்தனர். வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர். இந்த வாய்ப்பை தவறவிட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூன்றாம் கட்ட பயிற்சியின் போது தங்களது தபால் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 1,868 பேருக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்தது.

கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந் தம் பயிற்சி வகுப்பை நடத்தினார்.

இதுபோல், விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே சிகேடி பள்ளி மையத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள 1,496 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிம் பயிற்சி வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூர் ஜான் பாதிஸ்து பள்ளி மையத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் 1600 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதன்மை பயிற்றுநர் ஆறுமுகச்சாமி பயிற்சி வழங்கினார்.

தொடர்ந்து அனைவருக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான படிவம் வழங்கப்பட்டது. மதியம் ஆசிரியர்கள் வாக்குப்பெட்டியில் தபால் வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x