Published : 26 Mar 2021 10:09 PM
Last Updated : 26 Mar 2021 10:09 PM
திமுக கூட்டணியின் வேட்பாளர்களெல்லாம் வெற்றி பெற்றால்தான், நான் முதலமைச்சர். எனவே அவர்களையெல்லாம் நிச்சயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு அதிமுக, திமுக என 2 கட்சிகளிலுமே நிர்வாகிகளிடம் சலசலப்பு காணப்பட்டு வருகிறது. தங்களுக்கு 'சீட்' கிடைக்காத வருத்தத்தில் உள்ள பலர் சுயேட்சையாக போட்டியிடுதல், மாற்றுக் கட்சியில் இணைதல், கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் தேர்தல் பணியாற்றுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு
திமுகவைப் பொறுத்தமட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், இம்முறை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனாலும் பல தொகுதிகளில் உள்ளூர் நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மிகுந்த நெருக்கடி மற்றும் தவிப்புக்குளாகியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில்கூட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை உள்ளிட்ட தொகுதிகளில் வெளிப்படையாக இதைக் காண முடிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள 'ஐபேக்' நிறுவனத்தினர் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி அறிவித்துள்ள வேட்பாளருக்கு ஒத்துழைக்காத, மறைமுகமாக எதிர்த்து வேலை செய்யக்கூடிய, ஆளுங்கட்சியினரிடம் விலைபோன நிர்வாகிகள் குறித்த பட்டியலை ரகசியமாகத் தயாரித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து திமுக தலைமையின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
முதல்வர் வேட்பாளர் நான்
இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளுக்குமான திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘எனக்காகவும் சேர்த்துதான் இங்கு ஓட்டுக் கேட்டு வந்துள்ளேன். நான் கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிட்டாலும், ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான முதல்வர் வேட்பாளர் நான். கட்சியினர் இதை மறந்துவிட வேண்டாம். இங்குள்ள வேட்பாளர்களெல்லாம் வெற்றி பெற்றால்தான், நான் முதலமைச்சர். அதனால் இவர்களையெல்லாம் நிச்சயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
தேர்தலுக்கு பிறகு பதவி பறிப்பு உறுதி
இதுகுறித்து கூறிய திமுக நிர்வாகிகள், ‘திமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல், நிர்வாகிகள் ஒத்துழைப்பின்மையை மனதில் வைத்துதான் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பதாக உணர்கிறோம். காரணம் இன்று முன்தினம் அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அலட்சியம் காட்டுகிற ஒரு சில நிர்வாகிகள், வெற்றிப் பயணத்துக்கு தடையாக இருப்போரையும் கவனித்தே வருகிறேன்.
அவர்கள் மிகச் சிலராக இருந்தாலும், விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியனே போட்டியிடுவதாகக் கருதி ஓயாது உழைப்பதே திமுகவினரின் பிறவிக் குணம். ஒருபோதும் மாறாத வழக்கம்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பிறகு நிச்சயம் திமுகவினரிடம் மனமாற்றம் வர வாய்ப்புள்ளது. எனினும் தேர்தல் முடிந்தவுடன் ஐபேக் அளிக்கக்கூடிய பட்டியலின்படி, தேர்தல் பணியாற்றாத பலரது பதவிகள் பறிக்கப்படுவது உறுதி' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT