Published : 26 Mar 2021 08:41 PM
Last Updated : 26 Mar 2021 08:41 PM
திருவண்ணாமலை திருக்கோயிலை மீட்டுத் தந்தது திமுக. திருவண்ணாமலை திருக்கோயிலை மூடச்சொன்னது பாஜக. ஆனால், மூடச்சொன்ன கட்சி இங்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு ஆன்மிக நம்பிக்கை இருப்பவர்கள் பாஜகவை வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற ஒரு இமேஜை உருவாக்க முயல்கிறார்கள் என எ.வ.வேலு பேசினார்.
2 நாள் வருமான வரி சோதனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எ.வ வேலு பேசியதாவது:
''ஆன்மிகம் விதைக்கப்பட்ட மண் இந்த மண். இதைச் சொல்வதிலே எங்களுக்கு ஒருவித பெருமைதான். திருவண்ணாமலை திருக்கோயிலை மீட்டுத் தந்தது திமுக. திருவண்ணாமலை திருக்கோயிலை மூடச்சொன்னது பாஜக. ஆனால், மூடச்சொன்ன கட்சி இங்கு வந்து தேர்தலில் போட்டியிடுகிறது. ஆன்மிக நம்பிக்கை இருப்பவர்கள் பாஜகவை வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற ஒரு இமேஜை உருவாக்க இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகிறார்கள். டெல்லியில் இருந்து சொல்லப்பட்டே இதில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனால் திமுகவின் வெற்றி வாய்ப்பைக் குலைத்துவிட முடியாது. இதைச் செய்ததன் மூலம் திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு வலுப்பெற்றுள்ளோம் என்பதைத் தவிர பின்னடைவு இல்லை. எனக்கு இருக்கும் வருத்தம் என்னை இரண்டு நாட்கள் முடக்கிவிட்டார்கள் என்பதுதான். அதை ஈடுகட்டும் விதத்தில் கூடுதலாக உழைப்பேன். நேரம் காலம் பார்க்காமல் தூங்காமல் கூட வெற்றி பெற உழைப்பேன். என் தலைவரை முதல்வராக அமரவைக்க முழு மூச்சாகப் பாடுபடுவேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 8 வேட்பாளர்களை வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அது அவர்களுக்குத் தெரியாதா? இன்று அவர் பிரச்சாரத்துக்கு வருவது முன்கூட்டியே தெரியும் அல்லவா? ஆக இதன்மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்சியின் தலைவர் வந்துள்ளார். அவர் வேனையே பரிசோதனை செய்தார்கள். ஸ்டாலின் தங்கியிருக்கும் அறையையே பரிசோதனை செய்தார்கள். இது எல்லாம் எதைக் காட்டுகிறது? தோல்வி பயத்தால் இதை எல்லாம் செய்கிறார்கள்''.
இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT