Published : 07 Nov 2015 08:23 AM
Last Updated : 07 Nov 2015 08:23 AM
தீபாவளி பண்டிகையின்போது ரூ.375 கோடி அளவுக்கு மது விற்பதை இலக்காகக் கொண்டு டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். விற்பனையை சிறப்புக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
விழாக்கள் களைகட்டும்போது, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனையும் களைகட்டும். இதை கருத்தில் கொண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிக விற்பனைக்கு டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயிப்பதும் வழக்கம். தற்போது தீபாவளியை முன்னிட்டு, கடந்த ஆண்டு விற்பனையைவிட 25 சதவீதம் கூடுதலாக விற்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தீபாவளியின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனையை அதிகரிப்பது தொடர்பாக மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் கடந்த 3, 4 தேதிகளில் நடந்தது. அதில் விற்பனை பிரதிநிதிகள், கண் காணிப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப் பட்டன.
‘தீபாவளி நேரத்தில் அனைத்து பிராண்டுகளையும் வாடிக்கை யாளர்களின் கண்ணில் நன்கு தெரியும்படி கடைகளில் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடை, மதுக்கூடத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கண்டிப்பாக மது விற்பனை கிடையாது என்ற விளம்பர பலகை எழுதி கடை முன்பு தொங்கவிட வேண்டும்’ என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் சுமார் ரூ.300 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டில் அதைவிட 20 முதல் 25 சதவீதம் வரை அதிகம் (அதாவது ரூ.360 கோடி முதல் ரூ.375 கோடி வரை) விற்பனை செய்யுமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
விற்பனையை கண்காணிக்க, கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தாலுகாதோறும் தாசில்தார் தலைமையில் கண் காணிப்புக் குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர், காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். டாஸ்மாக் கடைகளின் விற்பனையை இக்குழு கடந்த 5-ம் தேதி முதல் கண்காணித்து வருகிறது.
இவ்வாறு டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT