Published : 26 Mar 2021 06:38 PM
Last Updated : 26 Mar 2021 06:38 PM

இலவசங்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை: விஜய பிரபாகரன் பிரச்சாரம்

நீலகிரி

மக்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள் பழைய இரும்புக் கடைக்குத்தான் போடப்பட்டன. இதனால், மக்களின் வரிப்பணம்தான் வீணானது. இலவசங்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறினார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ஏ.யோகேஸ்வரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூடலூர் காந்தி சிலை அருகே விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''தேமுதிக, அமமுக கூட்டணியில் உள்ள அதிமுக தொண்டர்களே உண்மையான அதிமுக தொண்டர்கள். ஏனென்றால் 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருந்தபோது தேமுதிக, அதிமுக உறவு எவ்வளவு சுமுகமாக இருந்ததோ அதே நிலை இன்றும் உள்ளது.

கேப்டன் விஜயகாந்தைப் பார்த்து இருப்பீர்கள், பிரேமலதாவைப் பார்த்திருப்பீர்கள், இரண்டும் கலந்த கலவையாக இனி விஜய பிரபாகரனை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அதிமுக அரசு தற்போது ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறது. கரோனா காலத்தில் மக்கள் பட்டினி கிடந்தபோது, துன்பப்பட்டபோது ஏனோ மாதம் நூறு ரூபாய் கூட வழங்கவில்லை.

மக்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள் பழைய இரும்புக் கடைக்குத்தான் போடப்பட்டன. இதனால், மக்களின் வரிப்பணம்தான் வீணானது. இலவசங்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. தேமுதிக கட்சியில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். நானும் இளைஞனாக உங்களுடன் இணைந்துள்ளேன்.

தேமுதிக அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளூர் மக்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. உங்கள் வேட்பாளரும் உள்ளூரைச் சேர்ந்தவர்''.

இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.

மதியம் ஒரு மணிக்கு பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், விஜய பிரபாகரன் இரண்டரை மணிக்கு காந்தி சிலை அருகில் வந்து 20 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டுச் சென்றதால், நீண்ட நேரமாகக் காத்திருந்த தேமுதிக, அமமுக தொண்டர்கள் விரக்தியடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x