Last Updated : 26 Mar, 2021 06:19 PM

2  

Published : 26 Mar 2021 06:19 PM
Last Updated : 26 Mar 2021 06:19 PM

புதுச்சேரி மீன்பிடி கேந்திரமாக உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு

காரைக்கால் மாவட்டம் பட்டினச்சேரியில் மீனவர்கள் மத்தியில் பேசிய மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்.

 காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் மீன்பிடி கேந்திரமாக உருவாக்கப்படும் என, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் மீனவர்கள் சந்திப்புக் கூட்டம் இன்று (மார்ச் 26) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

"புதுச்சேரி மாநில மீனவர்கள் நலனுக்காக, கடந்த 60 ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்டதைவிடப் பல மடங்கு அதிகமான நிதி கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அளிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் நலனிலும், மீனவர் சமுதாயம் மேம்பட வேண்டும் என்பதிலும் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். மீனவர்களுக்காக மத்திய அரசு கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் நிதியை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீனவர்களிடம் கொண்டு சேர்க்காமல் சோனியாவிடம் கொண்டு சேர்த்துவிட்டார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ள மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மீனவர்களுக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

மீன்பிடிப் படகுகளில் இயந்திரம் பொருத்துவதற்கான உதவிகள் செய்யப்படும். ஒவ்வொரு படகுக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு செய்யப்படும். மீனவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மீனவர்களுக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மீனவ கிராமங்கள் மாதிரி கிராமங்களாக உருவாக்கப்படும். படகுகளில் உயிரி கழிப்பறைகள் (பயோ டாய்லெட்) அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். புதுச்சேரி மீன்பிடி கேந்திரமாக உருவாக்கப்படும்".

இவ்வாறு கிரிராஜ் சிங் பேசினார்.

மேலும், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விரைந்து மீட்க பிரதமருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளர் வி.எம்.சி.எஸ்.மனோகரனை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

மத்திய இணை அமைச்சரும், புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன்ராம் மேக்வால், பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், நளினி கணேஷ், வி.கே.கணபதி, மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்ட நிர்வாகிகள், பல்வேறு மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ராகுல் காந்தியை கேலி செய்த அமைச்சர்

"2019-ம் ஆண்டே மீனவர்கள் நலனுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுவிட்டது. 6 அடி உயரத்தில் உள்ள நான் அத்துறைக்கு அமைச்சராக உள்ளேன். மக்களவையில் உறுப்பினராக உள்ளேன். ஆனால், அதே மக்களவையில்தான் ராகுல் காந்தியும் இருக்கிறார். ஆனால், எதையும் தெரிந்து கொள்ளாமல் அண்மையில் அவர் புதுச்சேரியில் பேசும்போது மீனவர்கள் நலனுக்கென தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் எனப் பேசியுள்ளார்" என்று அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

இந்தியில் பேசிய அமைச்சரின் பேச்சை இளைஞர் ஒருவர் மொழிபெயர்த்தார். அவரிடம், "புதுச்சேரியில் ராகுல் காந்தியின் பேச்சை நாராயணசாமி தவறாக மொழிபெயர்த்துச் சொன்னது போல், எனது பேச்சையும் தவறாக மொழிபெயர்த்துவிட வேண்டாம்" எனச் சிரித்துக் கொண்டே மொழிபெயர்ப்பாளரைப் பார்த்து கைகூப்பி மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x