Published : 26 Mar 2021 05:54 PM
Last Updated : 26 Mar 2021 05:54 PM
எய்ம்ஸ் செங்கல்லைத் திருடி, அதைப் பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் காட்டி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஒரு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பல உத்திகள் உள்ளன. ஆவேசமாகப் பேசுவது, புள்ளிவிவரத்தோடு பேசுவது, சிறு கதைகள் சொல்லிப் பேசுவது, எளிமையாகப் பேசுவது, நகைச்சுவையாகப் பேசுவது எனப் பல வகைகளில் பிரச்சாரத்தைக் கொண்டு செல்லலாம். இடம் சுட்டிப் பொருள் விளக்குக என்பதுபோல் கையில் செங்கல்லை வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் செய்யும் பிரச்சாரம் சமீபகாலமாக திமுகவினரால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிற்கு இதுவரை வராமல் அடிக்கல் நாட்டப்பட்ட அளவிலேயே உள்ளதை மக்கள் உணரும் வண்ணம், எளிதாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிட்டார் உதயநிதி என்கின்றனர் திமுகவினர்.
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் கையாளும் புதிய உத்தியாக, எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு 3 வருடம் கடந்த பின்னரும் கட்டப்படாமல் இருப்பதை எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல்லைக் காட்டி இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று பேசி வருகிறார். நான் கையோடு எடுத்து வந்துவிட்டேன் பார்த்தீர்களா என்று மக்களைப் பார்த்துக் கேட்டார்.
முதலில் சாத்தூரில் சாதாரண செங்கல்லைக் காட்டிப் பேச ஆரம்பித்தார். பின்னர் அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து போகுமிடமெல்லாம் காட்டிப் பேசுகிறார். தற்போது அதில் எய்ம்ஸ் என ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து செங்கல்லைத் திருடி வந்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான நீதிப்பாண்டியன் ஆன்லைன் மூலம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், ''மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து திமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைத் திருடிக்கொண்டு வந்துள்ளார். இந்த உண்மையை அவரே நேற்று விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் தான் அந்த செங்கல்லை பொதுமக்களிடத்தில் எடுத்துக் காண்பித்துள்ளார். அவரது இந்தச் செயல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 380-ன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆகவே, எனது இப்புகார் மனு மீது விசாரணை செய்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்திற்குள்ளேயிருந்து செங்கல்லைத் திருடிச் சென்ற உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் திருடி வந்த செங்கல்லைக் கைப்பற்றி சட்டப்படி தண்டனை பெற்றுத் தந்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT