Published : 26 Mar 2021 06:00 PM
Last Updated : 26 Mar 2021 06:00 PM
பல்லாவரத்தில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பல்லாவரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அதிமுகவில் இணையும் விழா முன்னாள் எம்எல்ஏ, ப.தன்சிங் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பல்லாவரம் நகரத் தலைவர் விஜய் நாராயணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதேபோல் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணைந்தனர்.
அப்பொழுது அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பேசுகையில், ''தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ 1,500 வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
18 வயது நிறைவடைந்தவர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் மூலம் கிராமப்புற மக்களும், மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.
கட்சியில் இணைந்த அனைவரும் இந்தத் தேர்தலில் தீவிரப் பணியாற்றி, அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, வீடு வீடாகவும், கடை கடையாகவும் ஏறி இறங்கி வாக்குகள் சேகரிக்க வேண்டும். மேலும், அதிமுக வெற்றி பெற தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT