Last Updated : 26 Mar, 2021 01:41 PM

1  

Published : 26 Mar 2021 01:41 PM
Last Updated : 26 Mar 2021 01:41 PM

மத்தியில் உள்ளதுபோல் மாநிலத்திலும் பாஜக ஆட்சி வந்தால்தான் புதுச்சேரி முன்னேறும் வாய்ப்புள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்: சாம்ராஜ்

"மத்தியில் உள்ளதுபோல் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். அப்படி வந்தால்தான் 15 ஆண்டுகளாகத் தடைப்பட்டு வந்த நிலை மாறி, முழு வேகத்தில் புதுச்சேரி முன்னேறும் வாய்ப்பு உள்ளது" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி தேவைப்படும். அதனால்தான் நிதி அமைச்சரை அனுப்பி வைத்துள்ளார்கள் என்றது உண்மைதான். மறுக்கவும் கூடாது. தேர்தல் அறிக்கையில் புதுவையில் 51 சதவீதம் பெண்கள். ஒவ்வொரு வார்த்தையும் வாக்குறுதியை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம். பெண்களுக்கு வாக்குறுதிகள் சொல்லவே வந்துள்ளேன். பாஜகவில் பெண்களுக்கு உரிய முக்கியத்தும் தரப்படும்.

2008இல் பாஜகவில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் கிராமப்புறத்தில் இருந்து உயர்மட்டப் பதவி வரை வழங்க முடிவு செய்யப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை பெண்களுக்கு மரியாதை தரும் கட்சியாக உள்ளது. அரசியலில் பெண்களா எனக் குடும்பத்தில் யோசிப்பர். கட்சியில் 33 சத இடஒதுக்கீடு மூலம் உரிய அங்கீகாரம் கொடுத்து நான் உயர் பதவிக்கு வந்துள்ளேன். பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் கட்சி பாஜக. தற்போது நிதி அமைச்சராக நான் இங்கு வந்திருக்க முடியாது.

2-வது பெண் நிதி அமைச்சர். ஆனால், முதலில் இருந்தவர் யார்? பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இந்திரா காந்தி இருந்தார். ஆனால், பாஜகவில் நான் பிரதமராக இல்லை. ஆனால், எனக்கு அந்தப் பதவிகளைக் கொடுத்தனர். பெண்களை முன்னேற்ற வேண்டும், வாய்ப்பு தர வேண்டும், ஆதரவு தர வேண்டும் என நினைக்கும் கட்சி பாஜக. இதனால்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகள்போல இங்கும் அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அதேபோல இந்த வாக்குறுதிகள் புதுவையிலும் நிறைவேற்றப்படும். அடித்தட்டு மக்களிடம் பெற்ற கோரிக்கைகள் வாக்குறுதிகளாகியுள்ளன. பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது எனப் பல திட்டங்களை புதுவையிலும், மேற்கு வங்கத்திலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நிறைவேற்றுவதில்லை.

மக்களுக்காக இதனைச் செய்திருக்க வேண்டாமா? உங்கள் நலனுக்காகவே மக்கள் தேர்வு செய்தார்கள். ரேஷன் கடையை மூடினால் என்ன மாதிரி ஆட்சி? மீனவர்கள், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை மோடி செயல்படுத்தினார். ஆனால் இதனை நிறைவேற்றவில்லை. புதுவையில் சுற்றுலா, கல்வி, மருத்துவமனைக்காக அதிகமானவர்கள் வந்து சென்றனர். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. பிரதமர் மோடி "பெஸ்ட்" மாநிலமாகப் புதுவையை மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.

அதற்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதுதான் தேர்தல் அறிக்கை. மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தது பிரதமர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி ராகுலிடம் மொழிமாற்றம் செய்தது போல மக்கள் குறைகளைத் திரித்துச் சொல்லவில்லை. மக்கள் விரும்பியதைச் சொல்லியுள்ளோம். விவசாயிகள் போல மீனவர்களுக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். புதுவையில் துறைமுகம் ஆழம் குறையாமல் இருக்க வேண்டும். 2009 முதல் துறைமுகம் தூர்வாரவில்லை. இந்த துறைமுகம் கட்டப்படும். மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல மீனவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். மற்ற மாநிலங்கள்போல புதுவை முன்னேற வேண்டும் என்ற ஆசை பிரதமருக்கு உள்ளது.

அதனால்தான் என்னைப் புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளார். மத்தியிலும் உள்ளதுபோல் மாநிலத்திலும் பாஜக ஆட்சி வர வேண்டும். அப்படி வந்தால்தான் தடைப்பட்டு வந்த நிலை மாறி, முழு வேகத்தில் புதுச்சேரி முன்னேறும் வாய்ப்பு உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் புதுவையின் தனித்தன்மை மேம்பாடு அடையும்".

இவ்வாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x