Published : 26 Mar 2021 01:02 PM
Last Updated : 26 Mar 2021 01:02 PM
"உயிரைக் கொடுத்தாவது அதிமுவை வெற்றி பெறச் செய்யுங்கள்” என, தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சிவகங்கையில் இன்று அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
”நாட்டு மக்களின் நன்மைக்காகச் சேர்ந்த கூட்டணிதான் அதிமுக கூட்டணி. திமுக அமைத்தது சந்தர்ப்பவாத கூட்டணி. இதைச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களியுங்கள். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் தொண்டை கட்டிவிட்டது. எனக்கு நீங்கள் கொடுத்த பதவிதான் முதல்வர். ஆனால், ஸ்டாலின் தூங்கும்போது கூட முதல்வர், முதல்வர் எனக் கனவு காண்கிறார்.
சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டு சட்டத்தை மதிக்காமல் திமுகவினர் அராஜகம், ரவுடித்தனம் செய்தனர். பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய சட்டப்பேரவையிலேயே அராஜகம் செய்தனர். ஆனால், சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே சென்றார். தேர்தல் தோல்விக்குப் பிறகும் ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக் கொள்வார். ஏனென்றால் ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கிறார்.
நான் எப்போதும் முதல்வர் என்று சொன்னதில்லை. மக்கள்தான் முதல்வர். மக்கள் உத்தரவுகளை நிறைவேற்றுகிறேன். ஸ்டாலின் தந்தை முதல்வராக இருந்ததால், செல்வச் செழிப்புடன் பதவிக்கு வந்தார். ஆனால், நான் கீழ் மட்டத்தில் இருந்து, கட்சிக்கு விசுவாசமாக இருந்து முதல்வர் பதவிக்கு வந்தேன். களத்தில் நிற்பவர்களுக்குத்தான் கவுன்சிலராகக் கூட ஜெயிப்பது கஷ்டம் என்று தெரியும்.
தந்தை விலாசத்தில் வந்தவர் ஸ்டாலின். தர்மம், நீதிப்படி அடிமட்டத்தில் இருந்து உழைத்து வருபவர்தான் பதவிக்கு வர வேண்டும். உழைப்பு மூலம் வெற்றி கிடைக்கும். நீங்கள் உழைத்தால் இந்தத் தேர்தலில் வெற்றி பெறலாம். உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
திமுகவால் சட்டப்பேரவையிலேயே பாதுகாப்பு இல்லாதபோது, நாட்டு மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும். எங்கள் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. பெண்கள், மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் இது தலைகீழாக மாறிவிடும். அந்த நிலைக்கு வாய்ப்பு கொடுக்காதீர்கள்.
சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தொழில் நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்ய தமிழகத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். தொழில்முனைவோர் மாநாட்டில் 304 தொழிற்கூடங்கள் ரூ7.5 லட்சம் கோடியில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன் மூலம் 5 லட்சம் பேர் நேரடியாகவும், ஐந்து லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. கரோனா காலத்தில் உலகில் எங்கும் தொழில் தொடங்காத நிலையில் ரூ.65 ஆயிரம் கோடிக்கு தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தற்போது கூட ரூ.25 ஆயிரம் கோடிக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதால் நல்ல மழை பெய்துள்ளது.
குடிமராமத்து திட்டத்தில் கண்மாய், குளங்கள் நிரம்பியுள்ளன. சென்னையில் கூட 85 சதவீதம் நீர் இருப்பில் உள்ளது. ஏராளமான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஒரு குடும்பக் கட்சி. அது வெற்றிபெறக் கூடாது. குடும்பக் கட்சி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக கம்பெனியை இழுத்து மூட வேண்டும்.
மக்கள் கேட்காமலேயே எனது மனதில் உதித்த திட்டம்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு. அரசுப் பள்ளி மாணவர்களை நினைத்து உருவானது. இதன் மூலம் தமிழகத்தில் 435 பேர் பயனடைந்துள்ளனர். வரும் காலத்தில் புதிதாக இரண்டு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால், கூடுதல் இடங்கள் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவும் ஒரு சாதனை”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT