Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM
நாட்டின் பெருமைமிகு பின்னலாடை நகரின் இதயப் பகுதியாக இருப்பது திருப்பூர் தெற்கு தொகுதி. 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின் இத்தொகுதி உதயமானது. திருப்பூர் மாநகராட்சியின் 21 வார்டுகள், நல்லூர் நகராட்சி, புறநகர் பகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றன.
பனியன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், கல்லூரிகள், வீரராகவப் பெருமாள் கோயில் மற்றும் விஸ்வேஸ்வரர் கோயில் ஆகியவை தொகுதியின் முக்கியப்பகுதிகளாக உள்ளன. அதிக அளவில் கொங்கு வேளாளர் சமூகத்தினர் வசிக்கின்றனர். முதலியார், செட்டியார், ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர். தென் மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி திருப்பூர் வந்தவர்களில் 60 சதவீதத்தினருக்கு வாக்கு உள்ளது.
குறைகள்
பழைய பேருந்து நிலையம், பல்லடம் ,தாராபுரம் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்ட பறக்கும் மேம்பாலம், பொதுமக்களிடையே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
நகரின் உட்கட்டமைப்பு, முறையான குடிநீர் விநியோகம், குப்பை அப்புறப்படுத்துதல், சுகாதாரம், கொசு ஒழிப்பு உட்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் பல ஆண்டுகளாக தொடர்கிறது. பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாத நிலையில், போக்குவரத்துக்கு ஏற்ப சாலை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. சில பகுதிகளில் மழைக் காலங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் சென்று வடிவதும் நீங்காத வேதனைகள்.மக்கள் நெருக்கம் நிறைந்த தொகுதி என்பதால் வாரக்கணக்கில் அள்ளப்படாத குப்பை, குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வீணாக செல்லும் நீர் என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு வீடுகள், விடுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுதல்
திருப்பூர் வடக்கு தொகுதியைக் காட்டிலும், தெற்கு தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் அதிக அளவில் நடப்பது பெரும் ஆறுதல். நொய்யல் ஆற்றை சுத்தம் செய்து நடைபாதை அமைத்தல், பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டி வருவது, தினசரி சந்தை, பூச்சந்தை, மீன் அங்காடி, பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் என பல்வேறு பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
2-வது இன்னிங்ஸில் வெல்வது யார்?
திருப்பூர் தெற்கு தொகுதி உருவான பின்பு நடைபெற்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் அதிமுகவின் முன்னாள் துணை மேயர் சு.குணசேகரன் வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் அதிமுகவின் சு.குணசேகரன் 73,351 வாக்குகளும், எதிர்த்து களம் கண்ட திமுகவின் க.செல்வராஜ் 57,418 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 15933. மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட கே.தங்கவேல் (மார்க்சிஸ்ட்) 13,597 வாக்குகளும், பாஜகவின் பாயிண்ட் மணி 7,640 வாக்குகளும் பெற்றனர். இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த முறையை போலவே, தற்போதும் சு.குணசேகரன் (அதிமுக), க.செல்வராஜ் (திமுக) மீண்டும் போட்டியிட கட்சிகள் வாய்ப்பளித்துள்ளதால் வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மநீம, அமமுக - யாருக்கு சாதகம்?
திமுக ஆட்சியின்போது திருப்பூர் மாநகராட்சி மேயராக க.செல்வராஜும், அதிமுக ஆட்சியின்போது துணை மேயராக தற்போதைய உறுப்பினர் சு.குணசேகரனும் இருந்தவர்கள். சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்களின் வாக்குகளை இருவரும் குறிவைத்துள்ளனர். அதற்கான பணிகளையும்தொகுதிக்குள் முன்னெடுத்துள்ளனர்.
அதேபோல, இந்த முறை அமமுகவில் போட்டியிடும் விசாலாட்சி, அதிமுக ஆட்சியின்போது மேயராக இருந்தவர். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் அனுஷா ரவி ஆகியோரும் கணிசமாக வாக்குகளை பிரிக்க நேர்ந்தால் அது யாருக்கு சாதகம், பாதகம் என்பதை தேர்தல் முடிவுகளே உணர்த்தும் என்பதே தற்போதைய கள நிலவரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT