Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற நிலை உருவாக்கப்படும், என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சோலார் பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;
தேர்தல் என்பது வெற்றியை மட்டும்கொண்டது அல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதுதான் முதன்மையான வெற்றி. இந்த தேர்தலில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சரி சம இட ஒதுக்கீடு செய்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ் படித்தால் மட்டுமே தமிழகத்தில் வேலை என்ற நிலை உருவாகும். அரசுப் பள்ளிகளின் தரம் உயரும். அரசின் அனைத்துத் துறையினரின் குழந்தைகளும், அரசுப் பள்ளி, கல்லூரியில் படிக்க வேண்டும். அப்படி படிக்க வைக்காதவர்களின் சம்பளத்தில் பாதி துண்டிக்கப்படும். முதல்வர் முதல் அனைத்து அரசுத்துறையினரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
அனைவருக்கும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். இலவசம் கிடையாது. விவசாயத்துக்கு அரசு ஊதியம் வழங்கும். உற்பத்தி பொருட்களை அரசே விற்றுக்கொள்ளும்.தமிழகத்தில் குவிந்து இருக்கும் வடமாநிலத்தவர்கள் அனைவரும் நாம் தமிழர் ஆட்சி அமைந்ததும், அவர்களின் சொந்த மாநிலத்துக்கு சென்று விடுவார்கள். தற்போது வடமாநிலத்தைச் சேர்ந்த 20 லட்சம் பேர் இங்கு வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
தேர்தலில் அதிமுக, திமுக வெற்றி பெறுவது என்பது ஒரு சம்பவம். நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாறு. மாற்றத்தை விரும்பும் மக்களின் பெருங்கனவுக்கான வெற்றியாக அது அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல்லில் சீமான்
நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
எத்தனையோ தேர்தல் வருகிறது. ஆனால், அரசியல் மாற்றம் வரவில்லை. அரசியல் மாற்றம் ஏற்பட புரட்சி ஒன்றால் தான் புரட்டிப் போட முடியும். நம் கண் முன் ஆற்று மணல், மலை மண் போன்றவை வெட்டிக் கொண்டுசெல்லப்படுகிறது. ஊழல் அனைத்துத் துறைகளிலும் ஊறி உள்ளது. அதனை மக்களால் தடுக்க முடியாது. படிக்காத ஒரு தலைவர் படிப்பகங்களைக் கட்டி படிக்க வைத்தார். ஆனால், திராவிடக் கட்சிகள் குடிப்பகங்களை திறந்து வைக்கின்றன.
ரூ.500 கொடுத்தால் போதும் என்ற நினைத்தவர்கள் நான் வந்ததால் இப்போது ரூ.5 ஆயிரம் வரை போயிருக்கிறார்கள். உங்கள் வாக்கின் மதிப்பை உயர்த்தியவன் நான். இவ்வாறு சீமான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT