Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தபால் வாக்குகளை இன்று முதல் 2 நாட்களுக்கு செலுத்தலாம் என்றும், அதற்காக 4 தொகுதிகளுக்கு 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக் கான வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மாவட்டந்தோறும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்ற கணக்கெடுப்புப்பணிகள் நடைபெற்று வந்தன.
இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,808 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இதையடுத்து, தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த அனைவரும் தபால் மூலம் வாக்களிக்க தேவையான வசதிகளை மாவட்ட தேர்தல் பிரிவு செய்துள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி தொகுதியில் 410 மூத்த குடிமக்கள், 140 மாற்றுத் திறனாளிகள் என 550 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரி வித்துள்ளனர்.
ஆம்பூர் தொகுதியில் 301 மூத்த குடிமக்கள், 116 மாற்றுத்திறனாளிகள் என 417 பேரும், ஜோலார்பேட்டை தொகுதியில் மூத்த குடிமக்கள் 292 பேர், மாற்றுத்திறனாளிகள் 106 பேர் என 443 பேரும், திருப்பத்தூர் தொகுதியில் மூத்த குடிமக்கள் 339 பேர், மாற்றுத்திறனாளிகள் 104 பேர் என மொத்தம் 443 பேர் என மொத்தமாக 1,808 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் தங்களுடைய இருப்பிடங்களிலேயே இருந்தபடி தங்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்ய ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 10 குழுக்கள் என மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் 1 மண்டல அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர், வாக்குப்பதிவு நுண் பார்வையாளர், பாதுகாப்பு காவலர், வாகன ஓட்டுநர் என மொத்தம் 6 பேர் இடம் பெற் றுள்ளனர். 4 தொகுதிகளுக்கும் 240 பணியாளர்கள் தபால் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இக்குழுவினர் இன்று (26-ம் தேதி), நாளை மறுநாள் (28-ம் தேதி) ஆகிய 2 நாட்களில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்கு சேகரிப்பார்கள். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஒவ்வொரு இடமாக சென்று இப்பணிகள் மேற்கொள் ளப்படும்.
இந்த 2 நாட்களில் தபால் வாக்களிக்க முடியாதவர்கள் 29-ம் தேதி (திங்கள்கிழமை) அன்று வாக்களிக்க மீண்டும் வாய்ப்பளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT