Published : 25 Mar 2021 09:10 PM
Last Updated : 25 Mar 2021 09:10 PM
தேர்தலுக்குப் பின் அதிமுக எதிர்க்கட்சியாகக் கூட உட்கார முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
செஞ்சியில் இன்று மாலை திமுக வேட்பாளர்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் மாசிலாமணி, திண்டிவனம் சீதாபதி ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
''கரோனா நோய்த்தொற்று தற்போது அதிகரித்துள்ளது. கூட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். இங்குள்ள வேட்பாளர்களும் முகக்கவசம் அணியவில்லை. இப்போது சொல்லும்போது அணிகிறார்கள். நான் ஏன் அணியவில்லை என்று கேட்கிறீர்களா...? நான் உயரத்தில், தூரத்தில் உள்ளேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்பில்லை. லேசான உடல் உபாதைகள் ஏற்பட்டு சரியாகிவிடும். நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.
தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம். கரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தோம். அப்போது எம்எல்ஏ ஜெ அன்பழகன் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
அரசுப் பணத்தைத் தேர்தலுக்காக செலவிடும் ஆட்சி தற்போது நடந்து வருகிறது. விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 34 ஆயிரத்தற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரையைத் தவிர தேவையற்ற பொருட்களை மக்களிடம் திணிக்கிறார்கள். ஸ்டாலின் முதல்வராகக் கனவு காண்பதாக பழனிசாமி சொல்கிறார். அவர் முதல்வர் கனவைக் கூட காணமுடியாது.
முதல்வர் பழனிசாமி எங்கு சென்றாலும் தன்னை விவசாயி, விவசாயி என்று சொல்லிவருகிறார்.அவர் போலி விவசாயி. பச்சை துண்டு போட்டுக்கொண்டால் விவசாயியா? எனக்கு விவசாயிகளைப் பிடிக்கும். போலி விவசாயிகளைப் பிடிக்காது. பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவர்களைப் பிடிக்காது. நீங்கள் உண்மையான விவசாயியாக இருந்தால் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்திருப்பீர்களா? டெல்லியில் போராடும் விவசாயிகளை புரோக்கர் என கொச்சைப்படுத்தும் நீங்கள் விவசாயியா? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என சொன்னாலும் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா?
திமுக ஆட்சிக்கு வந்ததும் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதுதான் முதல் தீர்மானமாக இருக்கும். தேர்தலுக்குப் பின் அதிமுக எதிர்க்கட்சியாகக் கூட உட்கார முடியாது. தமிழை அழிக்கவும், இந்தியைப் புகுத்தவும், சமஸ்கிருதத்தை கொண்டுவந்து மதவாத அரசியலை பாஜக புகுத்த முயல்கிறது. இங்குள்ள அதிமுக அதற்குத் துணை போகிறது. இதற்கு திமுக தலைமையிலான கூட்டணி விடாது''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT