Published : 25 Mar 2021 07:16 PM
Last Updated : 25 Mar 2021 07:16 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் மூலம் 6,083 பேர் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் குறித்த விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வந்தன.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தவறியவர்கள், முகவரி மாற்றம் செய்ய விரும்பியவர்கள், பெயரைத் திருத்தம் செய்ய வேண்டியவர்கள், பட்டியலில் இடம் பெறாதவர்கள் அது தொடர்பான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டி 6,523 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில், 6,083 பேர் புதிய வாக்காளர் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல, வாக்காளர் பட்டியலில் இருந்து 1,634 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறியதாவது:
''திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டி சிறப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கினர். அதில், வாணியம்பாடி தொகுதியில் 1,656 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அதில், 1,578 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர் தொகுதியில் 1,873 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அதில், 1,735 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜோலார்பேட்டை தொகுதியில் 1,943 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அதில், 1,767 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,051 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,003 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மூலம் புதிதாக 6,083 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
வ.எண்: தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
1. வாணியம்பாடி 1,22,763 1,26,557 37 2,49,357
2. ஆம்பூர் 1,15,412 1,22,555 26 2,37,993
3. ஜோலார்பேட்டை 1,18,792 1,20,613 08 2,39,413
4. திருப்பத்தூர் 1,18,623 1,19,905 16 2,38,544
----------------------------------------------------------------------------------
4,75,590 4,89,630 87 9,65,307
-----------------------------------------------------------------------------------
புதிய வாக்காளர் பட்டியில் 6,083 பேர் இடம் பெற்ற பிறகு திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 307 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில், 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர். வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் ஏப்ரல் 6-ம் தேதி தங்களது வாக்குகளைத் தவறாமல் செலுத்த வேண்டும்''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT