Published : 25 Mar 2021 06:25 PM
Last Updated : 25 Mar 2021 06:25 PM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜூ இன்று கயத்தாறு அருகே வெள்ளாங்கோட்டை, வலசால்பட்டி, சூரியமினுக்கன், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமி, பல்லங்குளம், மூர்த்திஸ்வரம், கங்கன்கிணறு, ஓலைக்குளம், வடக்கு, தெற்கு கோனார்கோட்டை, செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி உள்ளட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது வெள்ளாங்கோட்டையில் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை. ஜெயலலிதாவுக்கு இயற்கையாகவே உடல்நிலை சரியில்லை. 78 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இது ஊர் அறிந்த உண்மை.
அப்போது முதல்வராக இருந்தது ஓ.பி.எஸ். தான். பல்வேறு விமர்சனங்கள் வந்ததால், வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக தான் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம். முதல்வரோ, அமைச்சர்களோ, கட்சியினரோ இதுவரை யார் மீதும் வீண் பழி சுமத்தவில்லை. ஜெயலலிதாவுடன் சசிகலா ஒன்றாக இருந்து பார்த்துக்கொண்டார் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. அதை தான் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
எங்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு கூறினால் தான் கவலைப்பட வேண்டும். எதிர்கட்சிகள் குற்றம் தான் கூறுவார்கள். ஸ்டாலின் எங்களுக்கு பாராட்டு பத்திரமா வழங்குவார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். இதுபோல் நாங்கள் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் ஸ்டெர்லைட் ஆலை மூடிய வருத்தத்தில் உள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறந்தது அவர்கள் தான். அதன் விரிவாக்கத்துக்கு கையெழுத்திட்டது அவர் தான். அந்த வருமானம் நின்று போய் விட்டதே என்ற வருத்தத்தில் அவர் கூறுகிறார்.
அங்கு ஒரு அசம்பாவிதம் நடந்தது. எதிர்பாராதவிதமாக தூண்டிவிடப்பட்டு மக்கள் வம்பாக பலியானார்கள். அது விரும்பதாகாத சம்பவம். அதற்கு என்ன நிவாரணமோ அதனை அரசு செய்தது. உடனடியாக அந்த ஆலையை அதிமுக அரசு மூடியது.
ஸ்டாலினின் சொத்து மதிப்பு என்ன காட்டியுள்ளார். அவர் என்ன தொழில் செய்கிறார். இவ்வளவு சொத்து மதிப்பு காட்டியுள்ளார். நான் 2011-ல் என்ன சொத்து மதிப்பு காட்டினேனோ, அதைவிட ஒரு சதவீதம் அதிகமாக சொத்து மதிப்பு காட்டியுள்ளேன். நான் 5 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் அமைச்சராக சம்பளம் பெற்றுள்ளேன்.
எனது மகன் கணினித்துறையில் பணியாற்றுகிறார். இதில், ஒரு சதவீத வளர்ச்சி இருக்காதா. தமிழகத்திலேயே குறைவான சொத்து மதிப்பு காட்டிய வேட்பாளர் நான் தான். எப்படி பணத்தை மறைக்க முடியும். பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.
எதிர்கட்சியினர் எங்களை குற்றம் கூறினால் தான் அவர்கள் அரசியல் நடத்த முடியும். மனசாட்சிப்படி அவர்கள் எங்களை பாராட்ட வேண்டும். ஆனால், மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார்.
கோவில்பட்டியை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதை முதல்வரிடம் வலியுறுத்துவேன். இதனை நாளை இங்கு நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் அவர் அறிவிப்பார். ஒவ்வொரு தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர் தான் தமிழக முதல்வர், என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT