Published : 25 Mar 2021 03:30 PM
Last Updated : 25 Mar 2021 03:30 PM
ஸ்டாலினிடம் சரக்கு இல்லை; ஒன்றுமே தெரியாத தலைவராக அவர் உலா வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கே.பழனிசாமி மேலூரில் இன்று (மார்ச் 25) பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
''நாங்கள் விவசாயிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன செய்யப்போகிறோம் என்பதைச் சொல்கிறோம். ஆனால், ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அவர் செய்யப்போவதைப் பற்றிச் சொல்வதில்லை. என்னையும், அமைச்சர்களையும் பற்றி மட்டுமே பேசுகிறார். அவரிடம் சரக்கு இல்லை. ஒன்றுமே தெரியாத தலைவராக உலா வருகிறார். நான் விவசாயி என்று சொன்னாலே ஸ்டாலினுக்குக் கோபம் வந்து பொங்கி விடுகிறார். நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயி என்று சொல்கிறேன். அதில் உங்களுக்கு என்ன கோபம்?
மேலும், ஸ்டாலின் தருமபுரியில் பேசும்போது, ''ரவுடிகள்தான் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று பெருமையாகச் சொல்வார்கள். அதுபோல இவரு, நானும் விவசாயிதான் விவசாயிதான் என்று சொல்றார்'' என என்னையும், என் விவசாயத் தொழிலையும் கொச்சைப்படுத்துகிறார்.
அப்படியென்றால் உங்கள் பார்வையில் உழைக்கும் விவசாயிகளும், ரவுடிகளும் ஒன்றா? 100-க்கு 70 சதவீதம் பேர் விவசாயத்தையும், விவசாயத் தொழில்களையுமே நம்பி வாழுகிறார்கள். விவசாயிகளையும், விவசாயத் தொழிலையும் இப்படிக் கொச்சைப்படுத்திப் பேசினால், திமுக எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாது.
தமிழகத்தில் ரூ.3 லட்சத்து 500 கோடி மதிப்பில் 304 புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான பணிகள் நடக்கின்றன. இவை வந்தால் படித்த இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு யாரும் கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. நாம்தான் இந்தக் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT