Published : 25 Mar 2021 02:07 PM
Last Updated : 25 Mar 2021 02:07 PM
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் உள்ளிட்ட 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக காரைக்கால் மீனவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, காரைக்கால் மேடு மீனவர்கள் இன்று (மார்ச் 25) கூறியதாவது:
"காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த ரவி (எ) நடராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களும், நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த 2 பேரும், கடந்த 23-ம் தேதி இரவு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று (மார்ச் 24) இரவு இலங்கை கடற்படையினரால் 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக, இன்று அதிகாலையில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இது எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
வழக்கமாக மீன்பிடிக்கக்கூடிய இடத்தில்தான் மீன் பிடித்ததாக அந்த மீனவர்கள் தெரிவித்தனர். சில சமயம் சற்று இடம் மாறி சென்றால் கூட இலங்கை கடற்படையினர் வந்து விரட்டிவிடுவதும் உண்டு.
ஆனால், தற்போது, ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை மீறல் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காத காரணத்தால் திட்டமிட்டு மீனவர்களை கைது செய்திருப்பதாக தெரிகிறது.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் வகையில் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கைது நடவடிக்கை தொடராமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அது மத்திய அரசின் மீதுதான் அதிருப்தியை ஏற்படுத்தும்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT