Published : 25 Mar 2021 12:45 PM
Last Updated : 25 Mar 2021 12:45 PM
அதிமுக, பாஜக வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கைகள் முரண்பாட்டின் மொத்த வடிவமாக அமைந்துள்ளன என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சேர்ந்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கின்றன. கடந்த காலங்களில் இந்த கட்சிகள் ஒருமித்த கருத்தோடு கூட்டணியாக இயங்கியது கிடையாது. இது தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நீண்ட நெடுங்காலமாக செயல்பட்டு வருகிற கொள்கை கூட்டணி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
சமீபத்தில் அதிமுக, பாஜக வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கைகள் முரண்பாட்டின் மொத்த வடிவமாக அமைந்துள்ளன. கூட்டணி கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து அனைத்திலும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், அடிப்படைத்தன்மைகளில் கருத்தொற்றுமை இருக்க வேண்டும். திமுக, காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்ற ஒற்றைக் கோட்டில் நாங்கள் நீண்டகாலமாக கூட்டணி அமைத்து பயணித்து வருகிறோம்.
தேசிய கல்விக் கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை திணிக்கிற பாஜகவின் முயற்சியை அதிமுக எப்படி தடுத்து நிறுத்தப் போகிறது?
கல்வி மாநில பட்டியலில் கொண்டு வரப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆனால், மாநில பட்டியலில் உள்ள கல்வி குறித்து புதிய கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு, மாநிலங்களை கலந்து பேசி, கருத்தொற்றுமையை உருவாக்காமல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட மிகப் பெரிய சவாலாகும்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் 2002 இல் கொண்டு வரப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்ட பிரிவு 25 (1)-க்கு எதிரானது என்று மதச்சார்பற்ற சக்திகள் தமிழகத்தில் கடுமையாக எதிர்த்துப் போராடியதன் விளைவாக 2004 மக்களவை தேர்தலில் கடும் தோல்வியை அதிமுக சந்தித்தது. இதையொட்டி, மதமாற்ற தடைச் சட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெற்றதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இந்நிலையில், பாஜக கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறுவதை அதிமுக ஏற்றுக் கொள்கிறதா ? அதேபோல, பசுவதை தடுப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. இதில் அதிமுகவின் நிலை என்ன?
மதச்சார்பற்ற ஒரு அரசு, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, இந்து கோயில்களின் நிர்வாகம் இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் இந்து கோயில்கள் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை மிகச் சிறப்பாக கவனித்து வருகிறது. இதன்மூலம் கோயில் வழிபாட்டில் அனைவருக்கும் சம உரிமை, சமவாய்ப்பு வழங்கப்பட்டு பாரபட்சமற்ற முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
இதை மாற்றியமைத்து சனாதன வகுப்புவாத சக்திகளிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தற்போது நிலவி வருகிற சுமூக சூழ்நிலையை சீர்குலைத்துவிடும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம். இந்த நடவடிக்கைக்கு அதிமுக துணைபோனால் அதற்குரிய விலையை தர வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஐநா சபையில் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த இந்திய அரசு, இலங்கை தமிழர்களின் உரிமையைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? இதன்மூலம் இலங்கை தமிழர்களுக்கு மிகப்பெரிய அநீதியை மத்திய பாஜக அரசு இழைத்திருக்கிறது.
எனவே, கடந்த காலங்களில் ஒருமித்த கொள்கை அடிப்படையில் செயல்படாமல் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கிற அதிமுக, பாஜக, பாமகவிற்கு கடந்த மக்களவை தேர்தலில் வழங்கியதைப் போல, தமிழக வாக்காளர்கள் உரிய பாடத்தை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வழங்கப் போகிறார்கள். இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி நிச்சயம் அமையும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT