Published : 25 Mar 2021 12:08 PM
Last Updated : 25 Mar 2021 12:08 PM
கோவை வந்த கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இன்று வாக்குச் சேகரித்தார். அப்போது கேரளாவில் பாஜக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்துக் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி இன்று (25-ம் தேதி) பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று காலை ராமநாதபுரத்துக்கு வந்த அவர், ஒலம்பஸ் பகுதியில் வீதி வீதியாக நடந்துசென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மலையாள மொழி பேசும் மக்கள் குறிப்பிட்ட அளவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் சென்றபோது, மலையாளத்தில் பேசி உம்மன்சாண்டி வாக்குச் சேகரித்தார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாருக்குக் கை சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார்.
பிரச்சாரத்துக்குப் பிறகு, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கேரள மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணி (யூடிஎப்) வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேரளாவில் யூடிஎப் கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. கூட்டணி வேட்பாளர்கள் அங்கு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவால் எங்கள் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
கேரளாவில் பாஜக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்களுக்குள் ரகசிய உடன்பாடு வைத்துச் செயல்படுகின்றன. அங்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகியான பாலசங்கரின் பேச்சு இதை உறுதிப்படுத்தும்படியாக இருக்கின்றது. காங்கிரஸ் அனைத்து வகைகளிலும் பாஜகவைத் தீவிரமாக எதிர்த்து வருகின்றது. தமிழகத்தில் இடதுசாரிகளுடன் இணைந்தும், மற்ற மாநிலங்களில் சூழலுக்கு ஏற்றபடியும் எதிர்த்து வருகின்றது. கேரள தங்கக் கடத்தல் விவகாரம் மத்திய புலனாய்வுத் துறை அமைப்புகளின் விசாரணையில் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT