Published : 25 Mar 2021 08:41 AM
Last Updated : 25 Mar 2021 08:41 AM
முதல்வர் பழனிசாமிக்கு முதுகெலும்பு கிடையாது. கொத்தடிமையாக மோடிக்கு அடங்கியிருக்கும் ஒரு ஆட்சியை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.
திட்டக்குடியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நடுநாடு என்று அழைக்கப்படும் கடலூர் மாவட்டம் – திருவதிட்டக்குடி என்று அழைக்கப்பட்ட திட்டக்குடி. வேங்கை மரம் சூழ்ந்த – திட்டக்குடி. சிற்பங்களுக்கு உதாரணமான – விருத்தாசலம். நிலக்கரி சுரங்க நகரமாம் – நெய்வேலி. நினைத்தாலே இனிக்கும் பலாப்பழத்திற்கு பெயர் பெற்ற – பண்ருட்டிக்கு உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன்.
இவ்வாறு பெருமைக்குரிய தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தான் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள். எனவே அவர்களை ஆதரித்துத்தான் உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.
அவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல, நானும் வேட்பாளராகத்தான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக உங்களை தேடி வந்திருக்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதல்வர். எனவே அந்த உரிமையோடு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, இதுதான் திமுகவின் அடிப்படை கொள்கை. “சமூகநீதி" என்னும் அடித்தளம் அமைத்திட வேண்டும் என்று பாடுபடும் இயக்கம் தி.மு.க.
அந்த அடிப்படையில், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் நிறைவேற்றப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மாநிலத் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு தொடங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும். கட்டாயத் திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில், தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள்.
நீர் நிலைகளைப் பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்களாக இருப்பார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. பெண்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையமாக "அனிதா அச்சீவர்ஸ் அகாடமி" மாவட்டந்தோறும் தொடங்கப்படும். நீட் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி, அரியலூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா. அதைத்தொடர்ந்து பல மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்து இருக்கிறார்கள். அதை இந்த நாடு மறந்துவிடாது.
என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில், “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” என்ற பெயரில் ஒரு மையத்தை உருவாக்கி இந்த 2 வருடத்தில் ஏறக்குறைய 1,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம். 2 மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இது கொளத்தூருக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்திலும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இதுபோன்ற மையங்களைத் தொடங்குவோம் என்று அறிவித்தேன். அதைத்தான் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருக்கிறோம்.
சாலைப்பணியாளர்களாக 75 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள். கோவில்கள் மற்றும் அறநிலையங்கள் பாதுகாப்புப் பணிக்கு 25 ஆயிரம் திருக்கோவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் தொடங்க கடன் வழங்கப்படும். பட்டதாரி இளைஞர்கள் குறுந்தொழில் தொடங்கினால் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இளைஞர் சுய முன்னேற்றக் குழுக்கள் தொடங்கப்பட்டு அவர்கள் சிறுகுறு தொழில் தொடங்க கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் 1 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை என்ற நிலையை தி.மு.க. அரசு உருவாக்கும்.
ஆனால் அதேநேரத்தில் இன்றைக்கு பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இந்த ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பதற்கு எத்தனையோ காரணங்களை நாம் சொல்ல முடியும்.
அதில் முக்கியமான முதல் காரணமாக - 2016-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது, டி.என்.பி.எஸ்.சி. மூலம் பிற மாநிலத்தவர் சேரலாம் என்ற மாற்றத்தைச் சட்டத்தில் செய்த ஆட்சிதான் இந்த ஆட்சி என்பதைச் சொல்லலாம்.
அதுமட்டுமல்ல அம்மையார் ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். அதில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வந்திருக்கிறோம். வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அவர் இறந்த பிறகு, பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சியில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அதில் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று அறிவித்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலமாக எவ்வளவு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது? எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்?
இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதுவரையில் வழங்கவில்லை.
இந்த லட்சணத்தில் முதல்வரும் சில அமைச்சர்களும் கோட் சூட் போட்டுக் கொண்டு வெளிநாட்டிற்கு சுற்றுலா மாதிரி ஒரு பயணம் நடத்தினார்கள். பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆனால் இதுவரையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறோம்? எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது? என்ற பட்டியலை இதுவரையில் அவர்கள் வெளியிடவில்லை. காரணம் எதுவும் செய்யவில்லை.
அதுமட்டுமல்ல. காலியாக இருக்கும் அரசுப் பணிகளை நிரப்ப முடியாத லாயக்கற்ற ஒரு ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்கள் மறுக்கப்படும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக நம்முடைய இளைஞர்கள் சமீபத்தில் நெய்வேலியில் நடத்திய போராட்டம்.
இந்திப் பேசும் இளைஞர்கள் தமிழக பணிகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறார்கள். இதை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை. காரணம் அவருக்கு முதுகெலும்பு கிடையாது. கொத்தடிமையாக மோடிக்கு அடங்கியிருக்கும் ஒரு ஆட்சியை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இதைத் தடுக்க முடியும் என்றால் தி.மு.க.வால்தான் முடியும். இந்த ஸ்டாலினால் தான் முடியும் என்பதை அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் மற்றும் தமிழக மருத்துவ படிப்புகளில் இவர்களால் பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நம் வரிப்பணத்தில் வேறு மாநிலத்தவர் குளிர் காயலாமா? அதனால் நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த நம்முடைய பிள்ளைகளின் கல்வி பாதிக்காதா? வேலைவாய்ப்பு பாதிக்காதா? இதைத் தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து இன்றைக்கு ஒரு சர்வாதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அதனால் தான் இன்றைக்கு பல மாநிலங்கள் அதை ஏற்க மறுக்கிறது. ஆனால் இங்கிருக்கும் அரசு அதைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று அதை அமல்படுத்தி கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இதைத் தமிழக இளைஞர்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களை எல்லாம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம் போல விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமே பெட்ரோல் - டீசல் விலை உயர்வுதான். மோடி அதிகமாக வரி போடுகிறாரா… நான் அதிகமாக வரி போடுகிறேனா என்று பழனிசாமி போட்டி போட்டுக்கொண்டு வரியைப் போட்டு விலையை ஏற்றத்திற்குக் காரணமாக இருக்கிறார்.
பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. அதில் எந்த மாற்றமும் இல்லை. மலரும்… மலரும்… மலரும்… என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பாச்சா தமிழ்நாட்டில் பலிக்காது.
ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. காரணம் அ.தி.மு.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும் அவர் அ.தி.மு.க.வாக இருக்கமாட்டார். பாஜக-வாக மாறி விடுவார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் நாம் தான் வெற்றி பெற்றோம். ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அவர் ஓபிஎஸ் மகன். அவர் வெற்றி பெற்று பாஜக எம்.பி.யாகத்தான் இருக்கிறார்.
எல்லோருடைய லெட்டர் பேடிலும் அவரவர் கட்சித் தலைவர்களின் படத்தைத்தான் போடுவார்கள். ஆனால் அவர் மோடியின் படத்தைப் போட்டு வைத்திருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன் - எந்தக் காரணத்தை கொண்டும் பாஜக வெற்றி பெறக்கூடாது. அதேபோல அ.தி.மு.க.வும் வெற்றி பெறக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT