Published : 25 Mar 2021 08:01 AM
Last Updated : 25 Mar 2021 08:01 AM
ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படக்கூடிய கட்சிகளுக்கு இத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறது.
இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று (மார்ச் 24) தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் கவுண்டன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்து பேசியதாவது, ‘‘கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் வாக்களித்து, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் அனுமதி அளித்தார்கள். ஒரு அரசை தேர்ந்தெடுப்பது மக்கள் தானே தவிர, யாரோ சில நபர்கள் அல்ல.
கடந்த 5 ஆண்டுகளில் அந்த ஆட்சி எத்தகைய நெருக்கடிகளுக்கு ஆளானது என்பது அனைவருக்கும் தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிலைகுலைய செய்து செயல்பட விடாமல் தடுப்பது என்பது அப்பட்டமான ஜனநாயக விரோத, சர்வாதிகார செயலாகும்.
மத்தியில் அமைந்துள்ள பாஜக ஆட்சி மக்களையும், மக்களின் தீர்ப்பையும் நிராகரித்து, அவர்களின் தீர்ப்புக்கு எதிரான முறையில் இங்கே இருந்த நாராயணசாமி தலைமையிலான அரசை செயல்படவிடாமல் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். துணைநிலை ஆளுநரை பயன்படுத்தி இடையூர்களையும், தொல்லைகளையும் கொடுத்தார்கள்.
மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்தனர். காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் முடிவதற்கு ஓரிரு மாதங்கள் இருந்த நிலையில் காங்கிரஸ்-திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி, ஆட்சியை கலைத்து ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு செய்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்துக்கு எதிராகவும், சீர்குலைக்கின்ற வகையிலும் செயல்படக்கூடிய கட்சிகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு சென்ற துரோகிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் இத்தேர்தலில் சாவுமணி அடிக்க வேண்டும்.
அதேபோல் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள். இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயம், அவசியம் ஏன்? உங்களுக்கு ஏற்பட்டது. நீங்கள் தட்டாஞ்சாவடியில் வெற்றி பெறுவீர்களா? அல்லது ஏனாம் தொகுதியில் வெற்றி பெறுவீர்களா? ஒருவேலை இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் எந்த தொகுதியை நீங்கள் ராஜினாமா செய்வீர்கள். இதற்கு ரங்கசாமி பதிலளிக்க வேண்டும்.
சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பாஜககவுக்கும் புதுச்சேரி மக்கள் முடிவு கட்ட வேண்டும். பாஜகவுக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கும், வளர்ச்சிக்கும் ஏதேனும் தொடர்பு, பங்களிப்பு உண்டா? என்றால் எதுவும் கிடையாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இங்கு போட்டியிடுகிறது என்றால், புதுச்சேரி மாநில விடுதலைக்காக எங்களின் உயிரை அர்ப்பணித்த கட்சி என்கின்ற முறையில் களம் இறங்கியுள்ளோம்.
புதுச்சேரியின் மகாத்மா காந்தியாக போற்றப்பட்ட சுப்பையா தலைமையில் இந்த மாநிலத்தின் விடுதலைக்காக போராடிய கட்சி. ஆசியாவிலேயே தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்றிய கட்சியும் எங்கள் கட்சி. ஆகவே நாங்கள் இங்கு போட்டியிடுகிறாம். எனவே, எங்கள் கட்சியின் வேட்பாளர் சேதுசெல்வத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.’’இவ்வாறு முத்தரசன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT