Published : 25 Mar 2021 07:51 AM
Last Updated : 25 Mar 2021 07:51 AM
திராவிடக் கட்சிகள் உள்பட யாருடன் கூட்டணி அமைத்தாலும் ஊழல், லஞ்சத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது. தனித்தன்மையோடு தனித்து நின்று வென்றால்தான் சாத்தியம் என்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழக அரசியல் களத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்திருக்கும் சீமான், "இந்து தமிழ் திசை" நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:-
நீங்கள் சந்திக்கும் 3-வது தேர்தல். இதுவரை 4 சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற முடியவில்லை. எந்த நம்பிக்கையில் ஆட்சி அமைப்போம் என்கிறீர்கள்?
உள்ளாட்சி தேர்தலில் 12 சதவீதம் வாக்குகள் எடுத்துள்ளோம். ஆனால், அதை தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் மம்தா அரசியலுக்கு வந்தார், தோற்றார். பின்னர் இரண்டு தடவை முதல்வர் ஆனார். தனித்து நின்று போராடி சாதித்தார். வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கூட்டணிக்குப் போனதால் தனித்துவத்தை இழந்தார்கள். தனித்
துவம், தனித்தன்மை, தத்துவத்தோடு பயணிப்பதால் நாங்களும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
கட்சி தொடங்கியபோது இருந்த பெரும்பாலானோர் இப்போது இல்லை. உங்கள் மீது அவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அது உங்கள் வெற்றியைப் பாதிக்காதா?
கட்சியில் இருந்து நிறையப் பேர் வெளியே போகவில்லை. சிலர் போனார்கள். சிலரை நாங்களே வெளியே அனுப்பினோம். என்னை எதிர்ப்பவர்கள் எதிரி இல்லை. நான் யாரை எதிர்க்கிறேனோ அவன்தான் எதிரி. விமர்சனங்கள் என்னை வீழ்த்திவிடும் என்றால் நான் என்ன போராட்டக்காரன். கடலில் கல்லை எறிவதால் கடல் காயம்படுவதில்லை. நாம் கடலாக இருந்து கல்லை விமர்சனமாக எடுத்துக் கொண்டு போகவேண்டியதுதான்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. ஆனால், திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பதில்லை என்று உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே?
நான் தமிழ் தேசியம் பேசுறேன். திமுக திராவிடம் பற்றி பேசுகிறது. பாஜகவை மனிதகுல எதிரியாகப் பார்க்கிறேன். காங்கிரஸை இன எதிரியாகப் பார்க்கிறேன். அதிமுகவையும் விமர்சிக்கத் தவறியதே இல்லை. திமுகவைவிட பாஜகவை எதிர்க்கிறேன். திமுகவுக்கும், எனக்கும் இருப்பது அண்ணன், தம்பி சண்டை. திமுக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்தது. அப்போது கச்சத்தீவை மீட்கவோ, ஏழு பேரை விடுதலை செய்யவோ, திருக்குறளை தேசிய நூலக அறிவிக்கவோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிமுக, திமுக போலவே நாம் தமிழர் கட்சியிலும் ஒற்றைத் தலைமை, அதுவும் சர்வாதிகாரம் நிலவுவதாக விமர்சிக்கிறார்களே?
எத்தனை பேர் சென்றாலும் வாகனத்தை ஒருவர்தான் ஓட்டியாக வேண்டும். கப்பலுக்கு ஒரு மாலுமி, ஆயிரம் பேர் கொண்ட படையில் ஒரு கட்டளை தளபதிதான் இருப்பார். அதுபோலத்தான் அரசியல் கட்சியில் ஒற்றைத் தலைமையால் மட்டுமே சாதிக்கமுடியும். என்னைத் தோற்கடிக்க முடியும். ஆனால், நான் முன்வைக்கும் அரசியலை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. எப்போதும் நான் என்னை முன்னிறுத்துவதில்லை. கொள்கைகள், கோட்பாடுகள்தான் முன்னிறுத்தப்படுகின்றன.
விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்த கட்சிகள் தமிழகத்தில் வென்றதில்லை என்பது வரலாறு. மதிமுகவை உதாரணமாகச் சொல்லலாம். நாம் தமிழர் கட்சியால் மட்டும் எப்படி சாதிக்க முடியும்?
அதைத் தகர்த்து வென்றுகாட்டுவேன். நான் முதல்வராக அமரும்போது எனக்குப் பின்னால் என் அண்ணன் பிரபாகரன் படம் இருக்கும். எனது டேபிளில் நான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட போட்டோ இருக்கும். நான் வளர்ந்து வருகிறேன். ஈழப் பிரச்சினைகளை மட்டுமல்லாமல், தமிழ் மண்ணைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்தும் போராடி வருகிறேன்.
வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் உங்களுக்கு நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறதே - உங்கள் கட்சிக்கு எங்கிருந்து நிதி பெறப்படுகிறது?
வெளிநாட்டில் இருந்து அவ்வளவு எளிதாக யாரும் பணம் அனுப்ப முடியாது. கடும் சட்டங்களை இந்தியா அமல்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு எனது திருமணத்திற்கு எங்கள் அண்ணி (மதிவதணியின் அக்கா) ரூ.75 ஆயிரம் அனுப்பினார்கள். அதை அரசு தரவில்லை. பின்னர் நான் நேரில் போய் எனது திருமண சான்று போன்றவற்றைக் காண்பித்த பிறகு கொடுத்தனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எனக்கு பணம் வருவதைக் கண்டுபிடிக்காமல் என்ன செய்கிறது. எங்களது தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்குக்கூட பணம் இல்லாமல் சிரமப்படுகிறோம். இதுதான் நடைமுறை.
அதிமுக, திமுக தேர்தல் அறிக்கை இத்தேர்தலில் எதிரொலிக்குமா? உங்கள் தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் இடம்பெறுமா?
நாட்டில் முதன்மையான வளம் கல்வியறிவுதான். அது தனியாரின் சந்தைப் பொருளாக இருக்கக்கூடாது. அரசு கல்வி நிலையங்களை தரம் உயர்த்திவிடுவேன். அரசுப் பள்ளிகளில் படித்தால்தான் அரசு வேலையில் முன்னுரிமை. அரசுப் பள்ளி,
கல்லூரியில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் அரசு கல்வி நிறுவனங்களில் தான் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதி சம்பளத்தை அரசு எடுத்துக் கொள்ளும். குறைந்தபட்ச ஜனநாயகத்திற்கு அதிகபட்ச சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.
விவசாயம் அரசு வேலை என்பது சாத்திய மாகுமா? சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை வைத்து மக்களை ஏமாற்றுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?
உலகம் முழுவதும் கூட்டுப்பண்ணைதான் நடைபெறுகிறது. பிரபாகரன் அதைச் செய்து காட்டினார். அதில் தற்சார்பும் பெற்றார். விவசாயம் என்பது நமது பண்பாடு, வாழ்வியல் ஆகும். உலகத்திற்கு சோறிடுவது தெய்வச்செயல். குழந்தைகளுக்கு தரமான கல்வி,
பெற்றோருக்கு தரமான மருத்துவம். அப்படியென்றால் வாங்கும் சம்பளத்தைக்கூட செலவு பண்ண தேவையிருக்காது. டென்மார்க் அதைத்தான் செய்கிறது. நாங்கள் அதைச் செய்து காட்டுவோம்.
எல்லோரும் கூட்டணி அமைக்கும்போது, நீ்ங்கள் மட்டும் எக்கட்சியிலும் சேராமல் தனித்து நிற்பதன் காரணம் என்ன?
தனித்து தன்மானத்தோடு போரிடுவதால், மக்கள் தனித்து நிற்பதைத்தான் விரும்புகிறார்கள். கூட்டணியில் இருந்தால் எதையும்
சாதிக்க முடியாது. விவசாயம், பெண்களுக்கு சம உரிமை, பாலியல் வேறுபாடற்ற சமத்துவம் என எதையும் நிறைவேற்ற முடியாது. ஆதித் தமிழ்க் குடிகளுக்கு பொதுத் தொகுதியில் கடந்த முறை 22 இடம் கொடுத்தேன். இப்போது குயவர், நாவிதர், பண்டாரம், வண்ணார், குறவர் என 16 பேருக்கும் சீட் தந்துள்ளேன். சமூக நீதி பற்றி பேசும் கட்சிகள் கொடுத்திருக்கிறதா. பெண்ணிய உரிமை பேசும் திராவிடக் கட்சிகள் பெண்களுக்கு 12, 15 இடங்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் 117 சீட்டை பெண்களுக்கு ஒதுக்கியிருக்கிறோம். கூட்டணியோடு நாங்கள் சேர்ந்தால் ஊழல், லஞ்சத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT