Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM
தடுப்பூசி போடுவதற்காக குறிப்பிட்ட தேதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு, தடுப்பூசி போடாமலேயே தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பத்தால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இணைநோய்கள் உள்ளவர்கள் மற்றும்60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவை http://www.cowin.gov.in என்ற இணையதளத்திலும், ஆரோக்கிய சேது (Aarogya Setu),கோவின் (Co-WIN) ஆகிய செயலிகள் வழியாக செய்யலாம்.
இதில் பதிவு செய்யும்போது, பெயர், கைபேசி எண், ஆதார் எண்,மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் மின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பப்படும். மின்னஞ்சல் இல்லாதவர்களுக்கு, அங்கேயே சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இணையதளங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட பகுதியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தொடர்புடையவரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் கூகுள் வரைபட வழிகாட்டியும் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கான குறுஞ்செய்தி வந்தது. அதில் குறிப்பிட்ட தேதியில்,FLW போரூர் என்ற இடத்தில்தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்த கூகுள் வரைபட வழிகாட்டியில் தேடினால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைக் காட்டியது. இதனால் குழப்பமடைந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் பேசி, அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அவரது உதவியாளர்கள் ஏற்பாடு செய்தனர். அரசு உயர் அதிகாரி என்பதால் அவருக்கு இது சாத்தியமாகி இருந்தாலும், சாமானிய மக்களால் இப்படி செய்துவிட முடிவதில்லை.
இதேபோல், சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் ஒருவர் ஆரோக்கிய சேது செயலியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்திருந்தார். அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில், அவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அவரது மின்னஞ்சலுக்கு சான்றிதழ் வந்துள்ளது.
இது தொடர்பாக அவர் கூறிய தாவது:
நான் மார்ச் 20-ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்தேன். அன்று என்னால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அன்று நான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக எனது மின்னஞ்சலுக்கு சான்றிதழ் வந்துவிட்டது. இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது கரோனா அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே நிரந்தரதீர்வு, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அழைப்பு விடுக்கின்றன.
ஏராளமானோர் புகார்
ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் என்னால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சியில் பேசினால், இதுபோன்று பல புகார்கள் வருவதாக தெரிவிக்கின்றனர். வேறு இடத்தில் தடுப்பூசி போட, எனது ஆதார் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்யும்போது, ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என வருவதால், எனக்கு தடுப்பூசி போட மறுக்கின்றனர். இவ்வாறு சென்னையில் பலருக்கு நேர்ந்துள்ளது. இந்த பிரச்சினையில் சுகாதாரத் துறை தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இது தொடர்பாக டெல்லியில் உள்ள தொழில்நுட்ப குழுவுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT