Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார்? - பெருந்துறை தொகுதியில் வேட்பாளர்களின் ‘உரிமைப் போராட்டம்’

ஈரோடு

பெருந்துறை தொகுதிக்கான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்தது யார் என்பது குறித்து சுயேச்சையாகப் போட்டியிடும் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ.வும், தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், பிரச்சாரத்தின்போது உரிமைப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம ஊராட்சிகள் மற்றும் பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிகோயில், நல்லாம்பட்டி, பள்ளாபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 கிராம ஊராட்சிகள், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகள், ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் கொடிவேரி அணையை நீர் ஆதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பெருந்துறைத் தொகுதி மக்களின் குடிநீர் மற்றும் சிப்காட் தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த திட்டம், ரூ 224 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

எதிர்ப்பு போராட்டம்

கொடிவேரி அணையின் மேற்பகுதியில் கிணறு அமைத்து, இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நீர் எடுத்தால், ஆயக்கட்டு பாசனம் பாதிக்கப்படும் என கொடிவேரி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

அப்போதைய பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம், பொதுமக்கள், விவசாயிகளைத் திரட்டி ஆட்சியர் அலுவலகம் வந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மனு கொடுத்தார். அதோடு, முதல்வரைச் சந்தித்து இந்த திட்டத்தை நிறைவேற்ற அழுத்தம் அளித்தார்.

மாவட்ட நிர்வாகம் தொழில்நுட்பக் குழு அமைத்து திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதன் விளைவாக, ஏற்கெனவே திட்டமிட்டபடி கொடிவேரி குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

உரிமை கோரும் வேட்பாளர்கள்

இந்நிலையில், பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத்திற்கு, அதிமுக தலைமை இம்முறை வாய்ப்பளிக்காததால், அவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

அவர் தனது பிரச்சாரத்தின்போது, கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்றவை கொண்டுவர காரணமாய் இருந்த தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதே நேரத்தில் தற்போது பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், ‘கொடிவேரி குடிநீர் திட்டம் உள்பட பெருந்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதைய முதல்வர் பழனிசாமியுமே காரணம். இதற்கு எந்த தனிமனிதனும் சொந்தம் கொண்டாட முடியாது. அவ்வாறு யாராவது பிரச்சாரம் செய்தால் நம்ப வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கொடிவேரி குடிநீர் திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டங்களில் மக்களுக்கு பலன் கிடைக்கும் முன்பே, அதனை கொண்டு வந்ததற்கான பலனை அனுபவிப்பதில் இரு வேட்பாளர்களும் போட்டி போடுவது தொகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x