Published : 25 Mar 2021 03:16 AM
Last Updated : 25 Mar 2021 03:16 AM
ஆலங்குளம் தொகுதியில் விவசாயம், பீடி சுற்றுதல் ஆகியவை மக்களின் முக்கிய தொழிலாக உள்ளன. அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள் இந்த தொகுதியில் அதிகமாக உள்ளன. வெங்காயம், கத்தரி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகை பயிர்கள், மலர் சாகுபடி அதிகளவில் உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகளில் பெரும் பகுதி கேரளாவுக்கு விற்பனையாகின்றன.
சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா ஆகியோர் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பிரபலங்கள். அமைச்சர் தொகுதி என்ற அங்கீகாரத்தை சில முறை பெற்றிருந்தாலும், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படவில்லை.
மக்களின் எதிர்பார்ப்புகள்
ஆலங்குளம் தொகுதியில் 1,26,116 ஆண் வாக்காளர்கள், 1,34,018 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என, மொத்தம் 2,60,141 வாக்காளர்கள் உள்ளனர். நாடார் சமுதாய மக்கள் அதிகமாக உள்ளனர். முக்குலத்தோர், யாதவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனர்.
வேளாண் விளை பொருட்களை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். பீடி சுற்றும் தொழில் நலிவடைந்து வருவதால், இத்தொழிலில் உள்ள பெண்களுக்கு மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நீண்ட கால கோரிக்கையான தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலை திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.
சேறும், சகதியுமாக தேங்கிக் கிடப்பதால் முழுஅளவில் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் அணைகளை தூர்வார வேண்டும். பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபடுவதால், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, தடையின்றி தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும். நலிந்து வரும் பனைத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளன.
இந்த தொகுதியில் 1952-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக, காங்கிரஸ் தலா 4 முறையும், சுயேச்சை, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 88,891 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எப்சி கார்த்திகேயன் 84,137 வாக்குகள் பெற்றார்.
கடுமையான போட்டி
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளான பூங்கோதை ஆலங்குளம் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு, 2 முறை வெற்றி பெற்றார். திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது 4-வது முறையாக போட்டியிடுகிறார்.
தொகுதி மக்களிடம் அதிருப்தி இல்லை என்பது பூங்கோதைக்கு சாதகமாக இருந்தாலும், உள்கட்சியி லேயே ஒரு தரப்பினரிடம் அதிரு ப்தி இருப்பது பலவீனமாக பார்க்கப் படுகிறது.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் போட்டி யிடுகிறார். இவர், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட் டம் நடத்தினர். இதனால், அதிமுக விலேயே அதிருப்தி உள்ளது. அது தனக்கு சாதகமாக அமையும் என்றும், கூட்டணி பலம் கை கொடுக்கும் என்றும் பூங்கோதை எதிர்பார்க்கிறார்.
அதிமுகவும் முழு வீச்சுடன் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 3-வது இடத்தை பிடித்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி ஆலங்குளம் தொகுதியில் களமிறங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நாடார் சமுதாய மக்களின் வாக்குகளை இவர் அதிகமாக கைப்பற்றினால், அது யாருக்கு பாதகமாக அமையும் என்பது விவாதமாகியுள்ளது. தேமுதிக, நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவையும் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக இடையே போட்டி பலமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT