Published : 24 Mar 2021 10:49 PM
Last Updated : 24 Mar 2021 10:49 PM
நான் நேர்மையானவன், உதயநிதி நேர்மையானவர் அல்ல என மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்கான வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (24-ம் தேதி ) வெளியிட்டார்.
கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் தான் வெற்றி பெற்றால், நிறைவேற்றப்படும் பணிகள் குறித்து, 25 உறுதிமொழிகளை இன்று (24-ம் தேதி) மாலை வேட்பாளர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை தெற்கு தொகுதியின் அனைத்து வார்டுகளிலும் எல்.எல்.ஏ அலுவலகம் அமைக்கப்பட்டு, அவை 24 மணி நேரமும் மக்கள் குறைதீர்ப்பு மையங்களாக செயல்படும். நீண்ட நாட்களாக பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச நிலப்பட்டா வழங்கப்படும்.
மத்திய சிறைச்சாலை ஊருக்கு வெளியே மாற்றப்பட்டு, அங்கு ஒருங்கிணைந்த மார்க்கெட் பிளாசா அமைக்கப்படும். காந்திபுரம், கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி ஆகிய இடங்களில் சுரங்க நடைப்பாதை அமைக்கப்படும். தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.
தொகுதி முழுவதும் 6 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும்.
ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் அமைத்துத் தந்து, அவர்களுக்கு உணவு வழங்கப்படும்.
மருத்துவக் காப்பீடு செய்து தரப்படும். அனைத்து வார்டுகளிலும் உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகங்கள் அமைக்கப்படும். கந்துவட்டி முழுமையாக ஒழிக்கப்படும். சிறுகுறு தொழில்முனைவோர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வார்டுகளிலும் இலவச சட்ட சேவை மையங்கள் அமைக்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும். நீர், நெகிழி மற்றும் மின்கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த குடிசைத் தொழில்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஊக்குவிக்கப்படும்.
கிராஸ்கட் சாலை உள்ளிட்டட வர்த்தக சாலைகளில் சோலார் சாலைகள் அமைக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் திறன் மேம்பாட்டு முகாம்கள் அமைக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படும். அரசின் சேவைகள் வீடு தேடி வரும். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் இலவச மையங்கள் அமைக்கப்படும்.போக்குவரத்து நெரிசல் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில், பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். பொதுமக்களின் பங்களிப்போடு நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், பள்ளிக்கல்வி முடித்த மாணவ, மாணவியரை உட்படுத்தி மாணவர் நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்படும்.
இவை அனைத்தும் மக்களுடன் இணைத்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கமல்ஹாசன் கூறும்போது,‘‘ எல்லா தொகுதிகளிலும் என் வேட்பாளர்கள் இப்படிப்பட்ட திட்டங்களை வெளியிடுவர். எங்கள் வாக்குறுதிகள் செயலாக மாறும். இத்தொகுதிக்கு மட்டுமான வாக்குறுதிகள் இல்லை. இக்குறைகள் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் வாழும் இடங்களில் உள்ளது. குடிநீரும், கழிவுநீரும் கலந்து வருவதான புகார்கள் தமிழகம் எங்கும் உள்ளன. இவையெல்லாம் ஒரு அரசு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள். தெற்கு தொகுதி உட்பட இரவில் பெண்கள் தனியே நடமாட, தெருவிளக்கு வசதிகள் இல்லாத பல ஊர்கள் இன்னும் உள்ளன.
என்னை வெளியூர்காரர் என்று கூறும் எதிர்கட்சியினரின் வியூகங்களை முறியடிக்க வேண்டியதில்லை. முன்னரே, எம்ஜிஆர் ஆண்டிப்பட்டிக்குச் சென்று முறியடித்துள்ளார். நான் நடிகர் என்றால் அவரும் நடிகர். நான் வெளியூர்காரர் எனறால்,அவரும் வெளியூர்காரர். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற உணர்வு எல்லா நல்ல தமிழர்களுக்கும் உண்டு. அது இங்குள்ளவர்களுக்கும் உண்டு. கோவை மக்கள் என்னை அவர்களில் ஒருவனாக நினைத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னை நிந்தித்து சொன்னால் சிலருக்கு நிம்மதியாக இருக்கும். வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என பாஜக வேட்பாளர் கூறுகிறார்.
அப்படியென்றால் இங்கு உள்ள எம்.எல்.ஏ அதையெல்லாம் செய்ய முடியாதா?, மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளவர்கள் தான் செய்ய முடியுமா?
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஒரே பலம் தான் உள்ளது. அதை நிரகாரிக்கும் பிரதமர், நல்ல பிரதமர் இல்லை. அதை செய்யும் எந்த பிரதமரும் நல்ல பிரதமர் இல்லை. சினிமா தொழிலில் இருந்த போதே, நாங்கள் ஒரு இடத்தில் இருப்பது இல்லை. பல ஊர்களுக்கு செல்கிறோம். அதனால், என்னை வெளியூர்காரர் எனும் எதிர்கட்சி வேட்பாளர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர்.
என்னைப் பற்றி நடிகர் ராதாரவி விமர்சனம் செய்துள்ளார். அவர் வாங்கிய சம்பளத்துக்கு அவர் வேலை பார்க்கிறார். அதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. இந்த மந்திரிகள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கவில்லை என்பது தான் என் கோபம். ராதாரவி செய்வது போல், குறைந்தபட்ச அளவு வேலையாவது, இவ்வளவு பெரிய பதவியில் உள்ள மந்திரிகள் செய்ய வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.
திடீர் திடீரென வரும் குற்றச்சாட்டுகள் புதியது அல்ல.
நான் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படத்தில் நடித்துள்ளேன். அதற்கான ஊதியம் வாங்கியுள்ளேன். அது சரியான தொகையா என பார்த்து தான் வாங்கியுள்ளேன். அதற்கு வரியும் கட்டியுள்ளேன். அவர் நேர்மையானவர் இல்லை என்பது தான் என் வாதம்.ஆனால், நான் நேர்மையானவன் என்பது என் வாழ்க்கை,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT