Published : 24 Mar 2021 10:39 PM
Last Updated : 24 Mar 2021 10:39 PM

மதுரையில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நாளை பிரச்சாரம்: ஸ்டாலினின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பாரா?

மதுரை 

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் முதல்வர் கே.பழனிசாமி, நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்கு முன்னதாக தொடர்ந்து இரு முறை மதுரைக்கு பிரச்சாரத்திற்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக மீதும், அதன் மதுரை அமைச்சர்கள் மீடும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு முதல்வர் நாளை பதில் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வசர் கே.பழனிசாமி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மதுரை வந்தார். மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அவர் மதுரை அமைச்சர்கள், அதிமுக வேட்பாளர்கள், முக்கிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடரந்து நாளை காலை முதலமைச்சர் கே.பழனிசாமி, மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஒத்தக்கடையில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இந்தத் தொகுதியில் இதே ஒத்தக்கடையில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மதுரை ‘எய்ம்ஸ்’க்கு நிதி ஒதுக்கி கட்டுமானப்பணியை தொடங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

,மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? எதற்காக அந்நிய நாட்டிடம் மதுரை ‘எய்ம்ஸ்’ கடன் கேட்க வேண்டும் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப்பணி நடக்கும் என்றும் கூறினார்.

மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஸ்மார்ட்டாக ஊழல் செய்துள்ளனர் என்றும் ஆட்சிக்கு வந்ததும் அந்த முறைகேடுகள் விசாரிக்கப்படும், அதன்பிறகு மதுரை அமைச்சர்கள் தலைமறைவாகும்நிலைதான் ஏற்படும் என்று மிகக் கடுமையாக அதிமுகவையும், அதன் மதுரை அமைச்சர்களையும் விமர்சனம் செய்தார்.

அதனால், ஒத்தக்கடையில் பேசும் முதல்வர் கே.பழனிசாமி, ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேலும், குவாரிகள் தொடர்பான விவகாரத்தில், அதனைத் திறக்க திமுக ஆர்வம் காட்டியநிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அதிலிருந்து பின்வாங்கியது.

தற்போது இந்த விவகாரத்தில் அதிமுக நிலைப்பாடு என்னவென்பதையும் குவாரிகள் நிறைந்த இந்தத் தொகுதி மக்களுக்கு அவர் விளக்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஒத்தக்கடை பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு காலை 10 மணிக்கு மேலூர், 11 மணி-அலங்காநல்லூர், 12 மணி-செக்காணூரணி, மதியம் 1 மணி-உசிலம்பட்டியில் பிரச்சாரத்திற்கு செல்கிறார்.

அதன்பின் மதியம் மதுரை திரும்புகிறார். மதிய உணவுக்குப்பின் வி.வி.ராஜன்செல்லப்பாவை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் மாலை 3 மணிக்கு பேசுகிறார். தொடர்ந்து பழங்காநத்தம்-4.30 மணி, ஆரப்பாளையம்-5.30 மணி, முனிச்சாலை-6 மணிக்கு பேசுகிறார்.

பின்னர் காரைக்குடி செல்லும் முதல்வர் இரவு 8.30 மணிக்கு பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்துப் பேசுகிறார். நாளை மறுநாள் காலை காரைக்குடியிலிருந்து புறப்படும் முதல்வர் காலை திருப்பத்தூரில் காலை 9.30 மணிக்கு பேசுகிறார். சிவகங்கை-10.15 மணி, மானாமதுரை-11 மணி, அருப்புக்கோட்டை-12 மணி, விருதுநகர், சிவகாசி-4.30 மணி, திருவில்லிபுத்தூர்-5.30 மணி, ராஜபாளையம்-6.30 மணி, சாத்தூர்-8 மணி, கோவில்பட்டி-9 மணிக்கு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x