Published : 26 Nov 2015 10:50 AM
Last Updated : 26 Nov 2015 10:50 AM
மழை வெள்ள பாதிப்புகளால் தொடர் விடுமுறைக்குப் பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிக விடுமுறையை சமன் செய்யும் வகையில் தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறையை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 9-ம் தேதி தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு சென்னையில் இன்றுதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 11 வேலை நாட்களை இழந்துவிட்டதால் நடத்த வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதால் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்துவிட்டு அந்தநாட்களில் பாடங்களை நடத்த தனியார் பள்ளிகள் அலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு
அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஏற்கெனவே திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ல் தொடங்கும். ஏதாவது தவிர்க்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் தவிர இந்த அட்டவணையில் எவ்வித மாற்றமும் இருக்காது" என்றார்.
அதேவேளையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இழந்த வேலை நாட்களை ஈடுகட்டுவது தொடர்பாக அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப்பட்ட பின்னர் முடிவு எட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தனியார் பள்ளிகள் சில அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளன. சயன் பள்ளிக் குழும தலைவர் என்.விஜயன் கூறும்போது, "டிசம்பர் 17-ல் அரையாண்டுத் தேர்வை தொடங்க விரும்புகிறோம். சிறிய வகுப்புகளுக்கு முக்கியமான 5 பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும். மற்ற வகுப்புகள் குறித்து பின்னர் முடிவு எட்டப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT